கள ஆய்வு கூட்டத்தில் டிஷ்யூம் 4 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
தண்டையார்பேட்டை:அ.தி.மு.க., வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தின் கள ஆய்வு கூட்டம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், தண்டையார்பேட்டையில் கடந்த 7ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி, ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதியில், கழக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது மற்றும் பாக கமிட்டி உறுப்பினர்களின் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பகுதி செயலர்களை பேச அழைத்தபோது, அங்கு வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் ஞானசேகரன், 40, என்பவர், கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதாக கூறினார்.அதற்கு வேலுமணி, ''உன்னை தனியாக சந்தித்து பேசுகிறேன்,'' எனக்கூறி, சென்றுவிட்டார்.ஆனாலும், டேவிட் ஞானசேகரன் பேச முயன்றபோது, கட்சியினர் அவரை தடுத்து நிறுத்தியதால், கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில், டேவிட் புகார் அளித்தார்.அதன் விபரம்:அ.தி.மு.க., வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலராக இருந்த என்னை, அந்த பொறுப்பில் இருந்து, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலர் ராஜேஷ், திடீரென நீக்கிவிட்டார்.இதுகுறித்து வடசென்னைக்கு கள ஆய்விற்கு வந்த முன்னாள் அமைச்சரிடம் பேச முயன்றபோது, மாவட்ட செயலர் ராஜேஷ் துாண்டுதலின்படி அங்கிருந்தோர், நான் எடுத்து வந்த புகார் மனு, ஏ.டி.எம்., கார்டு மற்றும் 10,510 ரூபாயை பிடுங்கி, என்னையும் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை போலீசார், அ.தி.மு.க., வடசென்னை வடக்கு மாவட்ட செயலர் ராஜேஷ், அவரது உதவியாளர் திருஞானம் உள்ளிட்ட நால்வர் மீது நேற்று, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.