உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் போதிய அதிகாரிகள் இல்லாமல் திணறல் 

ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் போதிய அதிகாரிகள் இல்லாமல் திணறல் 

ஆவடி, ஆவடியில், புதிதாக கட்டப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர பதிவாளர் மற்றும் இணை பதிவாளர்களை நியமித்து, 'டோக்கன்' எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, பத்திர பதிவு செய்ய வருவோர் வலியுறுத்தியுள்ளனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, அய்யங்குளம், ஆவடி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், 1.68 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, ஆவடி மாநகராட்சி பகுதிகள், பூந்தமல்லி, திருநின்றவூர் நகராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 பகுதிகளின் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. இங்கு, ஆறு ஆண்டுகளாக, ஒரே ஒரு பதிவாளர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இணை பதிவாளர் பதவி காலியாக உள்ளது. மேற்படி புதிய அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருக்கும் அறை இல்லாததால், பத்திரப்பதிவுக்கு வருவோர் அலுவலகத்தில் உள்ளே நிற்பதால், கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல் சிலர், வெளியில் காத்திருக்கும் சூழல் உருவாகி வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் அலுவலகத்தின் வெளியே, போதிய பராமரிப்பின்றி குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. தவிர, வளாகத்தினுள் வாகனங்களை நிறுத்த முடியாமல், இட நெருக்கடியால் பத்திர பதிவாளர்கள் அவதிப்படுகின்றனர். ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக தினமும், 200 சாதாரண டோக்கன், 40 தத்கல் டோக்கன் வழங்கப்படும். இதன் எண்ணிக்கை தற்போது, பாதியாக குறைத்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர பதிவாளர், இணை பதிவாளர்களை நியமித்து, பத்திரப்பதிவு டோக்கன் பழையபடி அதிகப்படுத்த வேண்டும் என, பத்திர பதிவுக்கு வருவோர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி