தேசிய நெடுஞ்சாலை ஆணைய கடைக்கு தடை: நீதிமன்றத்தை அணுக அதிகாரிகள் முடிவு
சென்னை: பயணியர் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த பெட்டி கடைக்கு, போலீசார் தடைவிதித்துள்ளது குறித்து, நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளி ல், சுங்கச்சாவடிகளின் இரண்டு புறங்களிலும், பயணியர் வசதிக்காக இலவச கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கு அருகில் 'ஹைவே நெஸ்ட் மினி' என்ற பெயரில், பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தேநீர், காபி, தண்ணீர் பாட்டில், பிஸ்கட், குளிர்பானங்கள், சிறுதீனிகள், பேஸ்ட், பிரஷ், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த கடையை நடத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்ததாரர்கள், இலவச கழிப்பறைகளையும் பராமரிக்க வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பெருங்களத்துார் - புழல் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், சூரப்பட்டு சுங்கச்சாவடியின் இரண்டு புறங்களிலும், ஹைவே நெஸ்ட் பெட்டி கடைகள் இயங்கி வந்தன. இதில், பெருங்களத்துார் செல்லும் மார்க்கத்தில் இருந்த பெட்டி கடை, ஆவடி மாநகர போக்குவரத்து போலீசார் உத்தரவுப்படி இழுத்து மூடப்பட்டுள்ளது. கழிப்பறை பராமரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவசரத்திற்கு ஒதுங்குவோர் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆணைய அதிகாரிகள் முறையிட்டும், எந்த முன்னேற்றமும் இல்லாததால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டார அதிகாரிகள் கூறியதாவது: இந்த கடையை, ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என, நிர்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்த முறையில் மட்டுமே நிறுவனம் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆளும்கட்சி நிர்வாகியின் அறிவுறுத்தல்படி போலீசார் மூடியுள்ளனர். சுங்கச்சாவடியின் மற்றொரு பகுதியில் உள்ள கடை இயங்கி வருகிறது. ஒரு கடையால் மட்டும் விபத்துக்கள் நடப்பதாக போலீசார் கூறுகின்றனர். பெருங்களத்துார் முதல் புழல் வரை பல இடங்களில், சாலையை ஒட்டி பழைய இரும்பு வியாபார கடைகள் செயல்படுகின்றன. இங்கு, இரவு நேரங்களில் ராந்தல் விளக்கு, பேட்டரி லைட் கொளுத்தி வைத்து வியாபாரம் நடக்கிறது. இரவில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து நடப்பது குறித்து புகார் தெரிவித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் விரிவாக நீதிமன்றத்தில் தெரிவிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.