வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு துவக்கம்
சென்னை, சென்னையின் முக்கிய ஏரியாக, வேளச்சேரி ஏரி உள்ளது. மொத்தம், 265 ஏக்கர் பரப்பில் இருந்த ஏரி, அரசு திட்டங்கள், சாலை விரிவாக்கம் போக, தற்போது, 55 ஏக்கர் பரப்பில் சுருங்கியுள்ளது. எல்லா திசைகளில் இருந்தும் கழிவுநீர் விடுவதால், ஏரி மோசமான நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுத்து நீர்நிலைகளை மேம்படுத்த, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில், 19.40 கோடி ரூபாயில், ஏரியில் படகு சவாரியுடன், 1.91 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை, அக்.,30 ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஏரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கரையிலும் 800க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதையடுத்து, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரிய ஆகிய துறைகள் சேர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கியுள்ளன.இதற்காக, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. இப்பணி முடிந்ததும், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவோரில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் வழங்கப்பட உள்ளன.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இங்கு வசிப்போர், முகவரி ஆவணங்களான ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல், நகல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.கணக்கெடுப்பு பணி முடிந்ததும், அவர்களுக்கான மாற்று வீடு பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாங்கியோர்
தலைமறைவு! வேளச்சேரி ஏரி நீர்பிடிப்பு மற்றும் கரை பகுதியை, பத்து ஆண்டுக்குமுன்பு வரை, பிளாட் போட்டு, மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி, அரசியல் கட்சியினர் விற்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முடிவு எடுத்தபோது, இதை தடுக்கும் நடவடிக்கையாக நீதிமன்றத்துக்கு போக செலவு ஏற்படும் என, இரண்டு ஆண்டுக்கு முன்பே, சில பிரமுகர்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் பணத்தை கறந்தனர். பயோமெட்ரிக் பணி துவங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொ டர்ந்து, அவர்கள் தலைமறைவாகி விட்டனர். வீடுகளை அகற்றியபிறகே ஏரியா பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.