ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுக பா.ஜ.,வினர் எச்சரிக்கை
சேலையூர், சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் ஏரியில், தனியார் சார்பில் ஆக்கிரமித்து சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் சுற்றியுள்ள மக்கள் பாதிப்படைவதுடன், மழை காலத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழம் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் பா.ஜ., தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில், பொதுமக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை, நேற்று மாலை பார்வையிட்டனர்.அப்போது, மாடம்பாக்கம் ஏரி, கோப்புகளில் மட்டும் தான், 240 ஏக்கராக உள்ளது. ஆக்கிரமிப்பு ஏற்படும் போதெல்லாம், பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக, 15 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுவரை இடிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ.,வினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.