உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரு யூனிட் உற்பத்திக்கு ரூ.13 செலவு எல்.என்.ஜி., முடிவை கைவிட்ட வாரியம்

ஒரு யூனிட் உற்பத்திக்கு ரூ.13 செலவு எல்.என்.ஜி., முடிவை கைவிட்ட வாரியம்

சென்னை,சென்னை சென்ட்ரல் அருகில் மின் வாரியத்திற்கு பேசின்பிரிட்ஜ் எரிவாயு மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 30 மெகா வாட் திறன் உடைய நான்கு அலகுகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இதற்கு எரிபொருளாக, நாப்தா, இயற்கை எரிவாயு, அதிவேக டீசல் என, ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். நாப்தா விலை அதிகம் என்பதால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. சென்னையில் இயற்கை எரிவாயு கிடைப்பதில்லை.இதனால், புயல், தேர்தல் சமயங்களில் மட்டும், டீசலை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், சென்னை எண்ணுாரில் எல்.என்.ஜி., முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவநிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.அங்கிருந்து, குழாய் வழித்தடத்தில் வீட்டிற்கு, பி.என்.ஜி., அதாவது, 'பைப்டு நேச்சுரல் காஸ்' பெயரிலும், வாகனங்களுக்கு, சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, எண்ணுார் முனையத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து வந்து, பேசின்பிரிட்ஜ் மின் நிலையத்தின் இரு அலகுகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, எண்ணுார் - பேசின்பிரிட்ஜ் இடையில் குழாய் வழித்தடம் அமைப்பது, அதற்கான செலவு, மின் உற்பத்தி செலவு உள்ளிட்ட ஆய்வுகளில் மின் வாரியம் ஈடுபட்டது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆய்வின் அடிப்படையில், 'ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு, 13 ரூபாய் செலவாகும்; வெளிநாட்டில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதால், சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப விலை தொடர்ந்து மாறுபடும்; அதற்கு ஏற்ப மின் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும்' என, தகவல் கிடைத்தது.தற்போது, மின்சார சந்தையில் ஒரு யூனிட், 5 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கிறது. உச்ச நேரங்களில் அதிகபட்சம், 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு எரிவாயுவை பயன்படுத்தும் செலவு அதிகம். எனவே, அந்த எரிவாயுவை பேசின்பிரிட்ஜ் மின் நிலையத்தில் பயன்படுத்தும் முடிவு, அரசு ஒப்புதலுடன் கைவிடப்பட்டு உள்ளது. அவசர காலத்தில், பேசின்பிரிட்ஜில் வழக்கம் போல் டீசல் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை