உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 308 வீடுகளுடன் வாரிய குடியிருப்பு ஓராண்டாகியும் திறக்காத அவலம்

308 வீடுகளுடன் வாரிய குடியிருப்பு ஓராண்டாகியும் திறக்காத அவலம்

வால்டாக்ஸ் சாலை, சென்னை வால்டாக்ஸ் சாலையில், 35 கோடி ரூபாயில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 11 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஓராண்டுகள் ஆகியும், பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படாமல் உள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலை, எம்.எஸ்.நகர் என்ற மீனாம்பாள் சிவராஜ் நகரில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 1977ல் கட்டிய பழைய குடியிருப்பில், 176 வீடுகளில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வந்தனர். பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் விரிசல் விழுந்தும், மேற்கூரை உடைந்தும், அபாயகரமான நிலையில் காட்சியளித்தது. குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டடங்கள் கட்டி தர வேண்டுமென, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 2019ல், பழமையான குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, வாரியம் முடிவு செய்தது. புதிதாக, 35 கோடி ரூபாயில், தரைத்தளத்துடன் 11 மாடிகளில், 308 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில், லிப்ட் வசதி, பால்கனி, மரக்கதவுகள், டைல்ஸ், வெஸ்டன் கழிவறை, தீயணைப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, ஜெனரேட்டர் வசதியுடன், ஒரு குடியிருப்பு, 400 சதுரடி என்ற அளவில் அமைந்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள், 2020ல் துவங்கி, கடந்தாண்டு முடிவுக்கு வந்தது.கட்டுமான பணிகள் முடிந்து ஓராண்டுகள் ஆகியும், வீடுகள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. விரைந்து, குடியிருப்புக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'எம்.எஸ்.நகரில், வாரியத்தின் குடியிருப்பு பணிகள், 95 சதவீதம் முடிந்து விட்டன. குடிநீர், மின்சார வசதி உள்ளிட்டவற்றை, அந்தந்த வாரியங்கள் செய்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !