வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு தடவை கட்டி குடி போனால் போதும். ஆயுசுக்கும் அதை பெருக்க மாட்டாங்க. சுண்ணாம்பு அடிக்க மாட்டாங்க. ரிப்பேர்னு பத்து பைசா செலவழிக்க மாட்டாங்க. அதுவா இடிஞ்சு போயிரும். இதை ஆய்வு செஞ்சு சொல்ல ஒரு ஐ.ஐ.டி.
சென்னை, வசிக்க தகுதியற்ற குடியிருப்பு என, சென்னை ஐ.ஐ.டி., வல்லுநர்களால் சான்றளிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், தரமணி, கானகம் வாரிய குடியிருப்பில், 180 வீடுகளில் ஆபத்தை உணராமல் மக்கள் வசித்து வருகின்றனர். விபத்து நடந்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், வீடுகளில் வசிப்போரை வெளியேற்ற, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அடையாறு மண்டலம், தரமணி, கானகம் பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1990ம் ஆண்டு, 6.61 ஏக்கர் பரப்பு உடைய இடத்தில், 30 பிளாக் உடைய, 480 வீடுகள் கட்டப்பட்டன. மூன்றடுக்கு கட்டடத்தில், ஒவ்வொரு வீடும், 210 சதுர அடி பரப்பு உடையவை. அப்போது, பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில், 1.48 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து, வீடுகள் வழங்கப்பட்டன. தகுதியற்ற குடியிருப்பு கடந்த 2018ம் ஆண்டு, கடைசி தளத்தில் இருந்த வீடுகள் மிகவும் சேதமடைந்ததால், பலர் வீட்டை காலி செய்தனர். இதையடுத்து, 2019ல் ஐ.ஐ.டி., மற்றும் மாநகராட்சி கட்டுமான வல்லுநர்கள், குடியிருப்பை ஆய்வு செய்தனர். அனைத்து வீடுகளும், சேதமடைந்து இருந்ததால், வசிக்க தகுதியற்ற குடியிருப்பு என, சான்று அளித்தனர். இதையடுத்து, கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்ட வாரியம் முடிவு செய்தது. இதற்காக, 2020 ஜூனில், 80 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் 400 சதுர அடி பரப்பு வீதம், 600 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 300 குடும்பத்தினர் வீட்டை காலி செய்து, புதிய வீட்டுக்கான ஆவணங்களை வாரியத்திடம் ஒப்படைத்தனர். கடந்த 2020 டிசம்பரில் பணி துவங்க இருந்த நிலையில், அங்குள்ள சிலர், வீட்டுவசதி வாரியத்தில் கட்டப்படுவதைபோல், தரையுடன் சேர்த்து எல்.ஐ.ஜி., பிரிவின் கீழ் வீடு கட்டி தர வேண்டும் என, நீதிமன்றத்தை நாடினர். இதனால், புதிய குடியிருப்பு கட்ட முடியாத நிலையில், அதற்காக ஒதுக்கிய நிதி வேறு திட்டத்திற்கு மாற்றப்பட்டது. வசிக்க தகுதியற்ற குடியிருப்பு என, சான்று வழங்கி ஆறு ஆண்டுகள் ஆகியும், இன்னும் பலர் அதே வீட்டில் வசிக்கின்றனர். ஒதுக்கீட்டுதாரர்களாக உள்ள சிலர், அங்கு வசிக்கின்றனர். அபாயகரமான வீடுகள் மேலும், புதிய குடியிருப்புக்காக வீட்டை காலி செய்தவர்கள் மற்றும் நீதிமன்றத்தை நாடிய பலர், வெளியே வாடகை வீடுகளில் குடியேறியுள்ளனர். இவர்கள் வசித்து வந்த, ஆபத்தான வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த வகையில், 180 அபாய கரமான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு பிளாக்கிலும், கூரை மற்றும் சுவரில் கான்கிரீட் கலவை பெயர்ந்து உள்ளது. குடிநீர், கழிவுநீர் குழாய் வழியாக தண்ணீர் கசிகிறது. பக்கவாட்டு பகுதியில் செடிகள் முளைத்து, அவை பெரிதாக வளர்ந்துள்ளன. கட்டடம் ஈரப்பதமாக உள்ளதால், வரும் பருவமழையின்போது மேலும் வலுவிழந்து, இடியும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து, அங்கு வசிப் போரை வெளியேற்ற வேண் டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உயிருக்கு பாதுகாப்பில்லை வாரிய வீடுகளில் குடியிருந்தோர், பாதுகாப்பாக வெளியேறிவிட்டு, குடியிருப்பு குறித்து ஒன்றும் அறியாத மக்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். கட்டடம் இடிந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பர். வழக்கு முடியும் வரை, வீடுகளில் இருப்போரை வெளியேற்றி, அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பருவமழை நெருங்குவதால், துறை அமைச்சர், உயர் அதிகாரிகள், காவல் துறையினர் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - சமூக ஆர்வலர்கள்வீடுகளில் வசிப்போரே பொறுப்பு நீதிமன்ற உத்தரவு வந்த பின்தான், புதிய குடியிருப்பு கட்ட முடியும். வசிக்க தகுதியற்ற வீட்டை வாடகைக்கு விட்டது குறித்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். வீட்டை காலி செய்ய, அங்கு வசிப்போருக்கு, 'நோட்டீஸ்' வழங்கினோம். அசம்பாவிதம் நடந்தால், அதில் வசிப்பவர்களும், வாடகைக்கு விட்டவர்களும் தான் பொறுப்பு. இதை அழுத்தமாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டோம். முன்பைவிட குடியிருப்பு மிகவும் வலுவிழந்து உள்ளது. வரும் பருவமழைக்கு தாக்குபிடிக்குமா என தெரியவில்லை. - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்
ஒரு தடவை கட்டி குடி போனால் போதும். ஆயுசுக்கும் அதை பெருக்க மாட்டாங்க. சுண்ணாம்பு அடிக்க மாட்டாங்க. ரிப்பேர்னு பத்து பைசா செலவழிக்க மாட்டாங்க. அதுவா இடிஞ்சு போயிரும். இதை ஆய்வு செஞ்சு சொல்ல ஒரு ஐ.ஐ.டி.