உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தகக் காட்சி செய்தி  

புத்தகக் காட்சி செய்தி  

'மாதா, பிதா, குரு, தெய்வம், புத்தகம்!'சென்னை, நந்தனத்தில் நடந்துவரும் புத்தகக் காட்சியின் 10ம் நாள் மாலை நிகழ்ச்சியில், 'காலத்தை வெல்லும் புத்தகம்' எனும் தலைப்பில், வழக்கறிஞர் எம்.பி.நாதன் பேசியதாவது:புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் மனதைப் பண்படுத்தாது. நம்மை ஒழுங்குபடுத்தும் புத்தகங்களே, மனம் எனும் பூட்டுக்கு பொருத்தமான சாவியாக உள்ளது என்பதை நிரூபித்து வரும் இந்தப் புத்தகக் காட்சி, சிந்தனைக் களமாக மாறி உள்ளது.நமக்குக் கற்றுத் தரும் ஆசிரியருக்கும் சில வரைமுறைகள் உண்டு. எனவே, தன் வரையறை எதுவோ, அதற்கு உட்பட்டே ஆசிரியர் கற்றுத் தருவார். ஆனால், புத்தகங்களுக்கு எந்த வரையறையும் இல்லை. புத்தகங்கள் போதிக்கும் அறிவை நம்மிடமிருந்து எவரும் பறித்துவிட முடியாது.ஒரு புத்தகத்தைப் புரிந்து படிக்கும்போது, அந்தப் புத்தகம், வானில் சிறகடித்து நம்மைப் பறக்க வைக்கும். எனவே, மாதா, பிதா, குரு, தெய்வத்தோடு இனி புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலத்தை வெல்லும் புத்தகங்கங்கள் நம் நாட்டில் ஏராளம் உள்ளன. அவற்றை எண்ணிக்கையால் வரையறுக்க முடியாது. வள்ளுவரும், அவ்வையாரும், இராமலிங்க அடிகளாரும், புதுமைப்பித்தன், கல்கி உள்ளிட்டோரும் எழுதிய படைப்புகளெல்லாம், காலத்தை வென்று நிற்பவைதான். 'காலுக்கு செருப்பு கேட்கிறார்கள் மாணவர்கள், ஆசிரியர்களோ லாடம் அடிக்கிறார்கள்', 'இறந்துபோன அப்பா இன்னமும் வழிகாட்டுகிறார் புத்தக அலமாரியாய்' என, இதுபோன்ற இருவரிக் கவிதைகளும் என் வாசிப்பு அனுபவத்தில், காலத்தை வென்ற படைப்பாகவே உள்ளன. காலத்தை வென்ற புத்தகங்களுக்கு மத்தியில், காலத்தால் எழுதப்பட்ட புத்தகங்களும் நம் நாட்டில் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் மகாபாரதம். மொபைல் போன் வருகையால், எழுதும் பழக்கம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு பக்கம்கூட பிழையின்றி எழுத இன்றைய தலைமுறை தயங்குகிறது. ஆனால், 46000 பக்கங்கள் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தன் கைப்பட, பிழையின்றி எழுதினார் அம்பேத்கர். அந்த வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகம்கூட, காலத்தை வென்ற புத்தகம்தான். 'பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்' என, தனக்காக அல்லாமல் பிற உயிரினங்களுக்காக இறைவனிடம் வரம் கேட்டு, அந்த வரத்தை உடனே தரும்படி, 'விநாயகர் மணிமாலை'யில் பாடினான் பாரதி. பாரதியின் கவிதைகளைப் படித்து மனம் உருகிய வ.உ.சிதம்பரனார், 'நான் மரணிக்கும் வரை பாரதியின் படைப்புகளே போதும்' என்றார். அவ்வகையில், காலத்தை வெல்லும் புத்தகமாக பாரதியின் படைப்புகளே என் வாசிப்பில் முதலிடமாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ