புல்லட்டில் சென்றவர் பென்ஸ் கார் மோதி பலி
நீலாங்கரை: இ.சி.ஆரில் 'புல்லட்'டில் சென்றவர் 'பென்ஸ்' கார் மோதி பலியானார். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 54; கொத்தனார். இவர், நேற்று மாலை, புல்லட் பைக்கில், நீலாங்கரையில் இருந்து மதுரவாயல் நோக்கி புறப்பட்டார். பின்னால், தன்னையா, 32, என்பவர் அமர்ந்திருந்தார். நீலாங்கரை, வைத்தியலிங்க சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பிய போது, கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி, அதிவேகமாக சென்ற பென்ஸ் கார், புல்லட்டில் மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த தன்னையா, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரை ஓட்டிய நபர் மற்றும் அதில் இருந்த இரண்டு பேர் கல்லுாரி மாணவர்கள் எனவும், அவர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் அவர்களை பிடித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.