உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐகோர்ட் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பரிந்துரைகள் வழங்க அழைப்பு

ஐகோர்ட் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பரிந்துரைகள் வழங்க அழைப்பு

சென்னை, நீதிமன்றத்தில் எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படும் குண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த பரிந்துரைகளை வழங்க வேண்டும் என, காவல் துறை, வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரவுடி என்கவுன்டர்

சென்னை பெரம்பூரில் கடந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன், திருவேங்கடம் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் என்பவர், போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.இவ்வழக்கில் கைதானோரில் அஞ்சலி, சிவா, பிரதீப், அஸ்வத்தாமன், அருள் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, அவர்களின் உறவினர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி வாதிட்டார்.அவர், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் கொண்டு வரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நிலை அறிக்கை, மதிய உணவு எடுத்து வரும் பையில் மறைத்து, குண்டுகளை கொண்டு வந்த நபர்களின், 'சிசிடிவி' பதிவுகளின் புகைப்படங்களை தாக்கல் செய்தார்.இதை பார்த்த நீதிபதிகள், 'இந்த சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன; இந்த சம்பவத்துக்கு பின், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்த, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கேள்வி எழுப்பினர்.

குற்றச்சாட்டு

இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆறு வழக்கறிஞர்களும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். நீதிமன்றத்துக்கு வருவோரை சோதனை செய்வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன,'' என்றார்.இதற்கு மனுதாரர்களின் தரப்பு வழக்கறிஞர்கள், 'இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க, காவல் துறையிடம் போதிய ஆதாரம் இல்லை' என்றனர்.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குண்டு வெடித்திருந்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என, நாம் சிந்திக்க வேண்டும். இது, நீதிமன்றத்திற்கு வரும் அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.இது ஒரு முக்கியமான விஷயம் என்பதால், இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதை வழக்கறிஞர்கள், காவல் துறையினர் உணர வேண்டும். காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் பாதுகாப்பு சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எனவே, உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, வழக்கறிஞர் சங்கங்கள், காவல் துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்டோர், தங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை