உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.6 கோடி கடன் பெற்ற நிறுவனம் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு

 ரூ.6 கோடி கடன் பெற்ற நிறுவனம் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு

சென்னை: போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, கனரா வங்கியில் 6.10 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த, தனி யார் நிறுவனத்துக்கு எதிரான புகார் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கீழ்கட்டளையில், 'சிவாஜி ஹைடெக் அக்ரோ புட்ஸ்' என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரியப்பாடி கிராமத்தில், 3.6 ஏக்கரில் 6 டன் கொள்ளளவு உடைய நவீன அரிசி ஆலை அமைக்க திட்டமிட்டது. இதற்காக, தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கியில், 2022ல் 12 கோடி ரூபாய் கடன் பெற்றது. ஆனால், நிபந்தனைகளின்படி ஆலையை துவங்கவில்லை. மேலும், கடனுக்கான வட்டியும் செலுத்தவில்லை என தெரிகிறது. இதுகுறித்து கனரா வங்கி விசாரணை நடத்தியதில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று, 6.10 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கனரா வங்கி, மத்திய குற்றப்புலனாய்வு எனும் சி.பி.ஐ.,யிடம் கடந்தாண்டு அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வங்கி நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில், 'சி.பி.ஐ., விசாரணை செய்வதற்கான ஒப்புதலை, 2023ல் தமிழக அரசு திரும்பப் பெற்றுவிட்டது. வழக்குப்பதிவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கக்கோரி, மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம், கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது. இதேபோல வங்கி மோசடி வழக்கில், உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, '6.10 கோடி ரூபாய் வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டோர், வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், புகாரை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பது முறையல்ல. எனவே, ஆதாரங்களை மீண்டும் சி.பி.ஐ.,க்கு, வங்கி நிர்வாகம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ