உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலர்

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலர்

சென்னை சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மாதிகாரி, 57. இவர், கடந்த மாதம் 7ம் தேதி முதல், மேற்கு அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலகத்தின் அலுவலராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில், ஐ - பிளாக் 38வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், சிறப்பு விருந்தினராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரை அழைத்து வருவதற்காக, பள்ளியில் இருந்து கார் அனுப்பப்பட்டது. தர்மாதிகாரியின் வீட்டிற்கு சென்ற கார் ஓட்டுநர், வெகுநேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக்கு கார் ஓட்டுநர் தகவல் தெரிவித்தார். உடனே அலுவலரின் மொபைல் போன் எண்ணை கொடுத்து, தொடர்பு கொள்ள கூறியுள்ளனர். கார் ஓட்டுநர் அலுவலரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, வீட்டிற்குள் அழைப்பு ஒலி கேட்டுள்ளது. பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்காததால் சந்தேகமடைந்த ஓட்டுநர், திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையின் கீழே மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், தர்மாதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முடிவு வந்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை