தமிழக ஆன்மிக, கலாசார பூங்கா திட்டம் ரூ.100 கோடி வழங்கியது மத்திய அரசு சுற்றுலா அமைச்சர் தகவல்
மாமல்லபுரம், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், கோவளம் அடுத்த திருவிடந்தையில் செயல்படுத்தவுள்ள ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்திற்கு, மத்திய அரசிடம், தமிழக அரசு 100 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.தமிழகத்தில் பாரம்பரிய நினைவு சின்னங்கள், ஆன்மிக கோவில்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் அதிகம் உள்ளன. உள்நாடு, சர்வதேச பயணியர், சுற்றுலாவிற்காக இங்கு திரள்கின்றனர். இந்திய சுற்றுலாவில், தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.இந்த சிறப்பு நீடித்து நிலைக்கவும், சுற்றுலா மேலும் மேம்படவும், தமிழக அரசு பல சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் பொது, தனியார் முதலீட்டு பங்களிப்பில் கலாசார, ஆன்மிக, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டம் குறித்து தமிழக அரசு, 2022ல் சட்டசபையில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, திட்ட மதிப்பீட்டுடன் விரிவான திட்ட அறிக்கையை, ஆலோசனை நிறுவனம் வாயிலாக சுற்றுலாத்துறை தயாரித்தது.இந்த பூங்கா வளாகம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான, 218 ஏக்கர் பரப்பு இடத்தில் அமைய உள்ளது.பூங்கா வருவாயில், கோவிலுக்கு பங்களிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.சுற்றுலா வளர்ச்சிக்கான இத்திட்டத்திற்கு, அதன் மதிப்பீட்டுத் தொகையை நிதியுதவியாக வழங்க தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியது.இத்திட்டத்திற்காக மத்திய அரசிடம், தற்போது 100 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக, மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்திய நாட்டிய விழா துவக்க விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.