ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு பதிவு
சென்னை, சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்தாண்டு டிசம்பரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில், 'தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது; ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளது' என கூறி, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என, சிறப்பு நீதிமன்றத்தில், ஞானசேகரன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு, பொறுப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய ஞானசேகரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.பின், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணை வரும் 15ம் தேதி துவங்கும் என அறிவித்து வழக்கை தள்ளிவைத்தார்.