உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில ஜூனியர் தடகள போட்டி சென்னை வீரர் புதிய சாதனை

மாநில ஜூனியர் தடகள போட்டி சென்னை வீரர் புதிய சாதனை

சென்னை ---மாநில அளவில் நடந்த தடகள போட்டியின் ஆடவர் யு - 18 'ஹெப்டத்லான்' பிரிவில், சென்னையை சேர்ந்த சஞ்சய், மாநில அளவிலான சாதனை படைத்து அசத்திஉள்ளார். தமிழக தடகள சங்கம் மற்றும் மதுரை தடகள சங்கம் சார்பில், மாநில அளவில், 37வது ஜூனியர் ஓபன் தடகள போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த, 4,000க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். இதன் ஆடவர் பிரிவு, 18 வயதுக்கு உட்பட்டோர் 'ஹெப்டத்லான்' பிரிவில், சென்னை அணியில் பங்கேற்ற சஞ்சய், 4,429 புள்ளிகள் பெற்று, தன் சொந்த சாதனையை முறியடித்து, புதிய மாநில சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், இவர் பெற்ற 4,413 புள்ளிகளே மாநில சாதனையாக இருந்தது. வெற்றி குறித்து பேசிய சஞ்சய் கூறியதாவது: என் ஆரம்ப கட்டத்தில், எந்த விளையாட்டிலும் நான் ஈடுபாடு காட்டவில்லை. என் தாயார் தான் என்னை ஓட்டப்பந்தயத்தில் சேர்த்து, பயிற்சி பெற ஊக்குவித்தார். கடந்த ஆண்டு பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால், எனது விளையாட்டு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு, பழைய வேகத்தை அடைய நிறைய சிரமப்பட்டேன். தொடர்ந்த முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு பரிசாக, இன்று சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறேன். உலக சாம்பியன் மற்றும் உலக அளவில் சாதனையின் சொந்தக்காரரான கெவின் மேயர் சாதனையை முறியடிப்பதே எனது கனவாக இருக்கிறது. மேலும் அவர் தான் எனது உந்துதலாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ