உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1,325 கோடியில் 55 புதிய துணை மின் நிலையங்கள்: தமிழக மின்வாரியம் நடவடிக்கை

1,325 கோடியில் 55 புதிய துணை மின் நிலையங்கள்: தமிழக மின்வாரியம் நடவடிக்கை

சென்னை : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், குறைந்த மின்னழுத்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் 55 புதிய துணை மின் பகிர்மான நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மின்வெட்டை குறைக்க தேவையான நடவடிக்கைகளை, மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் தினமும் ஒரு மணி நேர மின்வெட்டு தற்போது அமலில் உள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு நேரம், சூழ்நிலைக்கேற்ப ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும், மூன்று மாதங்களில் மின்வெட்டு இல்லாத சூழலை ஏற்படுத்த, வல்லூர் அனல்மின் நிலையம், மேட்டூர் அனல்மின் நிலையம் மற்றும் வடசென்னை விரிவாக்க நிலையம் ஆகிய புதிய திட்டப் பணிகளை மின்வாரியம் துரிதப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாத வகையில், அனைத்து பகுதிகளிலும் மின்சப்ளை பல முறை துண்டிக்கப்படுகிறது. இதனால், மக்கள் கடும் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து, மின்வாரிய உயரதிகாரி கூறியதாவது:தற்போது மின்சார பயன்பாடு சற்று குறைந்துள்ளது. அதனால், தேவையின் அடிப்படையில் தான் மின்வெட்டை அமல்படுத்துகிறோம். ஆனால், பல இடங்களில் மின் சப்ளையில் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.இதற்கு, மின்வாரிய பழமையான உள்கட்டமைப்பு வசதிகள் தான் காரணம். பல ஆண்டுகளுக்கு முன், பதிக்கப்பட்ட கேபிள்கள், திறன் குறைந்த டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளால் கூடுதல் மின் சப்ளை செய்யமுடியவில்லை. இதனால், பல நேரங்களில் கேபிள்கள் எரிந்து, மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. டிரான்ஸ்பார்மர்கள் செயலிழந்து, குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. திறன் குறைந்த டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் துணை மின் நிலையங்களிலிருந்து, அளவுக்கதிகமான மின் இணைப்புகளுக்கு சப்ளை செய்யப்படுவதால், அழுத்தம் தாளாமல், குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் சப்ளை துண்டிப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்னைகளை சீர்செய்வது குறித்து, மின்வாரிய தொழில்நுட்பத் துறை உயரதிகாரி கூறியதாவது:குறைந்த மின்னழுத்தம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னைகளுக்கு பழமையான உள்கட்டமைப்புகள் தான் காரணம். ஒரு கோடி இணைப்புகள் இருந்தபோது அமைக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை கொண்டு, தற்போது 2.80 கோடி இணைப்புகளுக்கு சப்ளை தருகிறோம்.எனவே, தற்போதைய இணைப்புகளின் எண்ணிக்கை, சப்ளை தூரம் மற்றும் கொள்ளளவு ஆகியவற்றிற்கேற்ப புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கவும், டிரான்ஸ்பார்மர்களை மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு மட்டும், 1,325 கோடி செலவில், 55 புதிய துணை மின் பகிர்மான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே அமைக்கப்படுகின்ற, 22 துணை மின் பகிர்மான நிலையங்களும் இன்னும் ஓர் ஆண்டுக்குள் படிப்படியாக பணிகளை துவங்கும். இதில், சென்னையில் அத்திப்பட்டு, வியாசர்பாடி ஆகிய இடங்களில், 230 கே.வி., திறன் கொண்ட துணை மின் பகிர்மான நிலையங்களும், சுங்குவார்சத்திரத்தில், 400 கே.வி., திறன் துணை மின் நிலையமும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை துவங்கும். கண்டிகையில், 400 கே.வி., திறன் துணை மின் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்.இந்த நிலையங்களும், வரும் ஆண்டில் புதிதாக அமையும், 55 துணை மின் நிலையங்களும், 2012ம் ஆண்டில் முழுமையான செயல்பாட்டுக்கு வரும். அப்போது, இந்தியாவில் உயர்தர மின் சப்ளை வழங்கும் மாநிலமாக தமிழகம் மாறும்.இவ்வாறு அவர் கூறினார்.

நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்