சென்னை : கடன் தருவதாக கூறி, முன்பணமாக பலரிடம், 1.5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய, தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெண்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுமதி. 'ரெட்ஹில்சில், 'வானவில் டிரஸ்ட்' என்னும் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ராஜ் விவேக் என்பவர், ஒரு லட்ச ரூபாய் கடன் தருகிறார்' என, தெரிந்த பெண்களிடம் கூறி, 'முன்பணமாக, ஆறாயிரம் ரூபாய் தந்தால் தான், ஒரு லட்சம் கிடைக்கும்' என்று, ஆசை காட்டினார்.அவர் கூறியதை நம்பிய 25 பேர், தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து, 50 ஆயிரத்தை, நிதி நிறுவன உரிமையாளரிடம் கொடுத்தனர். நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுக்காமல் ஏமாற்றியதால், பணம் கொடுத்தவர்கள், சுமதியை முற்றுகையிட்டனர். சுமதி, நிதிநிறுவன உரிமையாளர் ராஜ் விவேக்கிடம் முறையிட்டார். அவர், 'இப்போது என்னிடம் பணம் இல்லை. உன் தாலி சரடை கழற்றி கொடு. அடகு வைத்து பணம் தருகிறேன். அதை வைத்து கொஞ்ச காலத்திற்கு சமாளித்து விடு. அதன்பின், தாலியையும், பணத்தையும் தந்து விடுகிறேன்' என கூறினார். அவர் கூறியதை நம்பிய சுமதி, தாலி சரடை கழற்றி கொடுத்தார். ஆனால் பணமும் கிடைக்கவில்லை; தாலியும் திரும்ப வரவில்லை. இதற்கிடையில் நிதிநிறுவனம், சிலரிடம் கொடுத்திருந்த, காசோலைகளும், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. இதுகுறித்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, ஏமாற்றப்பட்ட சுமதி உள்ளிட்ட பெண்கள், நேற்று போலீஸ் கமிஷனரிடம் முறையிட்டு புகார் கொடுத்தனர். புகாரை பெற்ற கமிஷனர் அலுவலக அதிகாரிகள், புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணத்தை திரும்பி வாங்கித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தனர்.