சென்னை:சிறுவனின் கண்குழிக்குள் பத்து நாட்களாக சிக்கியிருந்த, ஆணியை,
ஸ்டான்லி டாக்டர்கள் சாதுர்யமாக அகற்றினர். பார்வை பாதிப்பு ஏதுமின்றி
சிறுவன் தப்பினான்.சென்னை ராயபுரம் கல்மண்டபத்தைச் சேர்ந்தவர்
அப்துல்ரசாக். இவரது மகன் யூனிஸ், 14. தனியார் பள்ளி ஒன்றில், ஒன்பதாம்
வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த பத்து நாட்களுக்கு முன், வீட்டின் அருகே உள்ள மைதானத்தில்
விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்தான். அப்போது எதிர்பாராத
விதமாக கண் குழி அருகே காயம் ஏற்பட்டது.உடனடியாக, மருத்துவமனைக்குச்
சென்று, தையல் போட்டு, சிகிச்சை பெற்றுச் சென்றனர். வலி இல்லை என்றாலும்,
பத்து நாட்களாக வீக்கம் குறையாமலேயே இருந்தது. சந்தேகமடைந்த பெற்றோர்
நேற்று காலை ஸ்டான்லி மருத்துவமனை, கண் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றனர்.
டாக்டர் பாலசுப்பிரமணியன், சிறுவன் யூனிசை பரிசோதித்தார். சந்தேகத்தின்
பேரில், எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது, கண் குழிக்குள் இரண்டு செ.மீ.,
நீளமுள்ள ஆணி இருப்பது தெரிய வந்தது.பத்து நாட்களுக்கும் மேலாக கண் குழிக்குள் ஆணி இருப்பதால், கண் பார்வையில்
சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதால், உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப்பின், கண் மற்றும் அதை சார்ந்த நரம்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், ஆணியை அகற்றினர்.அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறும்போது,'இது மிகவும்
சிக்கலான அறுவைச் சிகிச்சை. நரம்புகளை லேசாக பாதித்தாலும், பார்வை
பறிபோய்விடும். மிகவும் நுட்பமாக ஆணியை அகற்றினோம். சிறுவனிடம் நான் கேட்ட
முதல் கேள்வி கண் பார்வை சரியாக தெரிகிறதா என்பதுதான். கண்ணுக்குள் ஆணி
பதிந்திருப்பது சிறுவனுக்கோ, பெற்றோருக்கோ தெரியவில்லை. இத்தனை நாட்கள்
இருந்தும், கண்ணுக்கு பாதிப்பில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது' என்றார்.சிறுவனின் கண் குழிக்குள் விழுந்த ஆணியை சாதுர்யமாக அகற்றிய டாக்டர் குழுவை, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவபிரகாசம் பாராட்டினார்.