சாலிகிராமம் : வீட்டின் கிரில் கேட் முன்னே, நின்று கொண்டிருந்த போது, மாயமான குழந்தையை கண்டுபிடிக்க, இரண்டு தனிப்படைகள், அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமம் மஜித் நகர் வலம்புரி விநாயகர் தெருவில் வசிப்பவர் கணேஷ். போரூரில் உள்ள கூட்டுறவு வங்கியில், நகை மதிப்பீட்டாளராக பணி புரிகிறார். இவரது மனைவி வசந்தி. இவர்களது மகன் தனுஷ், 6. மகள் இரண்டு வயது கூட நிரம்பாத கவிதா. கணேஷ் மற்றும் அவரது சகோதரர் குடும்பம் என, இரு வீட்டாரும், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில், கணேஷ் தி.நகர் சென்றிருந்தார். வசந்தி சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை கவிதாவின் பாட்டி லட்சுமி அம்மாள், கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருக்க, குழந்தை, வீட்டின் வாசலில் உள்ள கிரில் கேட்டை பிடித்து, நின்று கொண்டிருந்துள்ளது. மாலை 6 மணிக்கு, தனுஷை டியூசன் சென்டருக்கு அழைத்து செல்வதற்காக, வசந்தி, வீட்டில் இருந்து புறப்பட தயாரான போது, குழந்தை கவிதா இல்லாதது கண்டு திடுக்கிட்டார். அவர்கள் குடும்பத்தினரும், அருகில் வசிப்பவர்களும் குழந்தையை தேடத் தொடங்கினர். விருகம்பாக்கம் போலீசார் விசாரணையில், குழந்தை கவிதா, சிவப்பு நிற சட்டை, அரை சவரன் செயின், தோடு மற்றும் கொலுசு ஆகியவை அணிந்திருந்தது தெரிந்தது. நகைக்காக, குழந்தை கடத்தப்பட்டாளா என, போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று காலை, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மற்றும் தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர்கள் இருவர் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.