சென்னை: புதுடில்லியில் நடந்த தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ஜிசோ நிதி, ஜெபர்லின், செர்ஜின் ஆகிய வீரர்கள், தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்திய வாள்வீச்சு சங்கம் சார்பில் 36வது தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, புதுடில்லியின் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள கே.டி.ஜாதவ் ஹாலில் நடந்தது. 600க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், குழு மற்றும் தனிநபர் பிரிவுகளில் போட்டியிட்டனர். இதில் போயில், எப்பீ, சப்ரே என, மூன்று வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. குழு போட்டியில், தமிழக அணி தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தியது. தொடர்ந்து நடந்த தனிநபர் போட்டியிலும், ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று, மாநிலத்தை சிறப்பித்தது. இதன் ஆண்கள் சப்ரே பிரிவில் போட்டியிட்ட, தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த ஜிசோ நிதி, 31, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். அதேபோல் எப்பீ பிரிவில் சென்னையைச் சேர்ந்த செர்ஜின், 23, வெண்கலப் பதக்கம் பெற்றார். அடுத்து நடந்த பெண்கள் சப்ரே போட்டியில், சென்னையைச் சேர்ந்த ஜெபர்லின், 18, அந்த பிரிவின் இறுதி போட்டியில் விளையாடி, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். தனிநபர் பிரிவில் பதக்கங்கள் கைப்பற்றிய வீரர் - வீராங்கனையர், அடுத்ததாக நடக்கவுள்ள சீனியர் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் மற்றும் சீனியர் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.