ஏழு ஆண்டுகளுக்கு பின் ஓய்வூதிய பலன் வழங்க தயாராகிறது சென்னை பல்கலை
- நமது நிருபர் - சென்னை பல்கலை முன்னாள் பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்குப்பின் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக, சென்னை பல்கலை கடும் நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இதனால், பல்கலையின் நிர்வாக செயல்பாடுகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஓய்வூதிய பலன்கள், 2018ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, ஓய்வூதியதாரர்கள் கடும் மனவேதனையில் உள்ளனர். இந்நிலையில், ஓய்வு பெற்றோருக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசின் நிதித்துறையும், உயர்கல்வித்துறையும் துவங்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு, 2018ம் ஆண்டு முதல் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. தற்போது, உயர்கல்வித்துறை தணிக்கை குழு, பல்கலை ஆவணங்களை ஆய்வு செய்து, 65 கோடி ரூபாய் வரை ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டியுள்ளதை கண்டறிந்துள்ளது. முன்தொகை உட்பட பல்வேறு ஆவணங்கள் சரிபார்ப்புக்குப்பின், அந்த தொகையில் மாற்றம் வரலாம். இந்த நிதியை விடுவிக்க, நிதித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில், சென்னை பல்கலை ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.