தி.நகரில் ரூ.165 கோடி புது பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தி.நகர:தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புது மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, 164.92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி, 2023 மார்ச்சில் துவக்கியது. இரும்பு மற்றும் கான்கிரீட் கலவை கலந்து, 'காம்போசைட் கர்டர்' முறையில் இரும்பு மேம்பாலமாக அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன் திறக்க திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு தடைகளால் தாமதமானது. இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாரானது. தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த பாலத்தை நேற்று, நேரடியாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன், சேகர்பாபு, தி.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், கவுன்சிலர்கள் ஏழுமலை, ராஜா அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இந்த பாலத்திற்கு தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ., 'ஜெ.அன்பழகன் மேம்பாலம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் இருந்து, தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 27 அடி அகலத்தில், 53 இரும்பு துாண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தி.நகர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து மேம்பாலத்தில் ஏற 120 மீட்டருக்கு சாலை, மேம்பாலத்தில் இருந்து இறங்க 100 மீட்டருக்கு சாலை, இருபுறமும் நடைபாதையுடன் 6 மீட்டர் அகலத்தில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.