உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்கலேட்டரில் சிக்கிய குழந்தையின் கைவிரல் ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு

எஸ்கலேட்டரில் சிக்கிய குழந்தையின் கைவிரல் ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு

சென்னை: எஸ்கலேட்டரில் குழந்தையின் கைவிரல் சிக்கிய சம்பவம், விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று இரவு 8:50 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. இந்த விமானத்திற்கு, 'ஏரோ பிரிட்ஜ்' ஒதுக்கப்படாததால் 'ஓபன் பே' எனும் திறந்த வெளியில், விமானம் நிற்கும் தடம் எண்: 47ல் இருந்து புறப்பட இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணியர், தரைத்தளத்தில் உள்ள, கேட் எண்: 104 வழியாக சென்று, விமானத்தில் ஏறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் இரு குழந்தைகள் வந்திருந்தனர். அவர்கள், இரண்டாம் தளத்தில் இருந்து எஸ்கலேட்டரில் தரை தளத்திற்கு இறங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களின், பாவிகா எனும் மூன்று வயது பெண் குழந்தையின் கை விரல், எஸ்கலேட்டரில் சிக்கி, விரல் நசுங்கி குழந்தை கதறியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டு, விமான நிலைய தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் பெற்றோர் உட்பட நான்கு பேரும், தங்கள் பயணங்களை ரத்து செய்தனர். இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''குழந்தைக்கு மோதிர விரலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து, விசாரணை நடக்கிறது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ