உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தகச் சந்தையில் நாஞ்சில் சம்பத் பேசியதன் தொகுப்பு: 

புத்தகச் சந்தையில் நாஞ்சில் சம்பத் பேசியதன் தொகுப்பு: 

சென்னை ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடந்துவரும் 47வது புத்தகச் சந்தையின் மூன்றாம் நாளில், 'பத்தில் ஒன்று' எனும் தலைப்பில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:இதுபோன்ற அரங்குகளில் பேச வாய்ப்பு கிடைப்பது அரிது. எல்லாவித இலக்கியங்களையும் பேசுவதற்கு இதுவே சரியான மேடை. தமிழ்நாட்டில் புத்தக வாசிப்பாளர்களை அதிகரித்த பெருமை 'பபாசி' அமைப்பிற்கு உண்டு. இதன் வாயிலாகவே, தமிழத்தின் பிற மாவட்டங்களிலும் புத்தகச் சந்தை என்ற விழா துவங்கப்பட்டது.எனக்கு இங்கே பேசக் கொடுக்கப்பட்டுள்ள 'பத்தில் ஒன்று' என்ற தலைப்பு பற்றி, 'அதென்ன பத்தில் ஒன்று' என, பலரும் கேள்வி எழுப்பினர். தமிழர்களின் 'பத்துப்பாட்டு' எனும் சங்க இலக்கியத்தில், ஏழாவதாக வரக்கூடிய 'நெடுநல்வாடை' என்ற ஒன்றைப் பற்றி பேச விரும்பினேன். அதனால்தான், 'பத்தில் ஒன்று' என தலைப்பு வைக்கப்பட்டது.இறைவனோடு தர்க்கம் புரிந்து, கேள்விகள் கேட்ட, நக்கீரனாரால் பாடப்பட்டதே 'நெடுநல்வாடை' எனும் இலக்கியம். கேள்வி கேட்பதற்கு வாசிப்பு பழக்கம் அவசியம். ஒருவரின் கேள்வி ஞானத்தை அதிகரிப்பது வாசிப்பு பழக்கம்தான். அன்றைய தமிழர்கள், ஒட்டுமொத்த மனித இனத்திற்காக சிந்தித்தார்கள். அவர்களின் சிந்தனை உலகம் முழுதுக்கும் பொதுவானதாக இருந்தன. நக்கீரனார் 'உலகம் உவப்ப' என, 'திருமுருகாற்றுப்படை'யில் உரைக்கிறார். பெரிய புராணம் தந்த சேக்கிழார், உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்கிறார். இன்றைய தலைமுறை வாசிக்கவும், யோசிக்கவும் தயாராக இல்லாமல், 'ஆன்ட்ராய்டு' போன்களில் நேரத்தைப் போக்குகிறது. வாசிக்கும் பழக்கம் வசமாகினால், அது வாழ்க்கையை வசப்படுத்தும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். அறிஞர் அண்ணா மரணப் படுக்கையில் இருந்தபோதும் புத்தகங்களை வாசித்தார். மோகன்சந்த் கரம்சந்த் காந்தி என்ற மனிதர் மகாத்மா காந்தியாக மாறுவதற்கு புத்தகங்களே காரணமாக இருந்தன.காந்தியின் எழுத்துக்களை வாசித்தார் நெல்சன் மண்டேலா. அதனால்தான், 28 ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்தபோது, தன்னை சிறைப்படுத்தியவர்களை தண்டிக்காமல், 'அவர்கள் செய்தவற்றை மறப்போம்' என்றார். புத்தகங்கள் மனதை விசாலமாக்கும். அறிவைத் தெளிவாக்கும். சாதனையாளர்கள் அனைவரும் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், சிறையில் தொடர்ந்து புத்தகங்களை வாசித்தார் பகத் சிங். அதனால்தான், தூக்கு மேடையில் நின்றபோதும், அந்தக் கயிற்றை அவரால் முத்தமிட முடிந்தது. புத்தக வாசிப்பு மன தைரியத்தைக் கொடுக்கும். எனவே, புத்தக வாசிப்பாளர்கள் எல்லாக் காலத்திலும், எல்லாச் சூழலிலும் வாழ்வார்கள். ஆகவே, வாசியுங்கள், வாழலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ