உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செப்., 15க்குள் பணியை முடிங்க: மாநகராட்சி குழப்பம் ரூ.30 கோடி பணியை துவக்குங்க: உதயநிதி

செப்., 15க்குள் பணியை முடிங்க: மாநகராட்சி குழப்பம் ரூ.30 கோடி பணியை துவக்குங்க: உதயநிதி

சென்னை : வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், வரும் 15ம் தேதிக்குள் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்வாய் தோண்டும் பணிகளை முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 30 கோடி ரூபாயில் கால்வாய் துார்வாரும் பணியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில், 81.1 கி.மீ., துாரத்தில், 44 நீர்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீர்வளத்துறை பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை ஆகியவை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதில், விருகம்பாக்கம் கால்வாய், விருகம்பாக்கத்தில் உள்ள புவனேஸ்வரி நகரில் துவங்கி சின்மயா நகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, 6.70 கி.மீ., வரை சென்று கூவம் ஆற்றில் இணைகிறது. இந்த கால்வாயில், 6.36 கி.மீ., துார் வாரி, 1,490 மீட்டர் தடுப்பு சுவரை உயர்த்தி, முள்வேலி அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்கு, 30 கோடி ரூபாயை, நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், கால்வாய் துார்வாரும் பணிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று அரும்பாக்கத்தில் துவக்கி வைத்தார். தற்போது, இரவு நேரங்களில் பெய்துவரும் மழையால், விருகம்பாக்கம் கால்வாயில், கழிவுநீருடன், மழைநீரும் கலந்து ஓடுகிறது. ஆங்காங்கே, பாலிதீன், பழைய துணிகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகள் மிதக்கின்றன. வடகிழக்கு பருவமழை, அடுத்த மாதம் துவங்க உள்ளது. முன்னெசரிக்கை நடவடிக்கையாக, 'மழைநீர் கால்வாய் பணிகள், கழிவுநீர் இணைப்பு பணிகள், சாலை சீரமைப்பு பணிகளை எல்லாம், செப்., 15க்குள் முடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த நேரத்தில், விருகம்பாக்கம் கால்வாயை, 30 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணிகளை, நீர்வளத்துறை துவக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விருகம்பாக்கம் கால்வாயை முழுமையாக துார்வாரி கரைகளை பலப்படுத்தினால், அண்ணா நகர், வளசரவாக்கம், கோடம் பாக்கம், தேனாம்பேட்டை மண்டலங்களில், பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவது தடுக்கப்படும். இந்த திட்டத்தை வடிவமைத்தது நீர்வளத்துறை. ஆனால், சென்னை மாநகராட்சி வாயிலாக, அவசர கதியில் துார்வாரும் பணி துவங்கப்பட்டு உள்ளது. மிதவை பொக்லைன்களை பயன்படுத்தினாலும், முழுமை யாக துார்வார முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பருவ மழை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், பணிகளை மாநகராட்சி துவக்குகிறது. அதற்குள் எப்படி பணியை முடிப்பர் என்று தெரியவில்லை. 'அரைகுறையாக பணிகளை முடித்துவிட்டு, பருவ மழை துவங்கியதும் எல்லா பணிகளும் முடிந்துவிட்டது என, வழக்கம் போல் கணக்கு காட்டாமல் இருந்தால் சரி' என்றனர். பணிகள் முடிய ஆறு மாதமாகும்! வளசரவாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய மூன்று மண்டலங்களை விருகம்பாக்கம் கால்வாய் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பருவ மழையின் போதும், தடுப்பு சுவருக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதை தடுக்கும் வகையில், வீடுகள் இல்லாத இடங்களில், 5 அடி உயர் தடுப்பு சுவரை உயர்த்த உள்ளோம். உயர்த்தப்படும் சுவரின் மேல், 4 அடியில் கம்பி வேலியும் அமைக்கப்பட உள்ளது. இத்துடன், 4 - 5 மீட்டருக்கு துார்வாரி, கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளும் துவங்கியுள்ளன. பருவமழைக்கு முன், துார்வரும் பணி முழுமையாக நிறை வடையும். மற்ற பணிகள் ஆறு மாதத்திற்குள் நிறைவடையும். - மாநகராட்சி அதிகாரிகள்

வெள்ள அபாயம்: மக்கள் அச்சம்

சூளைமேடு, அரும்பாக்கம் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் அருகில் குடியிருக்கும் மக்கள் கூறியதாவது: விருகம்பாக்கம் கால்வாயை, 2024 அக்டோபரில் மழையின்போது, துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டார். தற்போது, 11 மாதங்களுக்குப்பின் பணி துவங்கியுள்ளது. ஒவ்வொரு பருவமழைக்கு முன் கண்துடைப்புக்காக, விருகம்பாக்கம் கால்வாய் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே, இக்கால்வாய் செல்லும் வழியில் ஆறு தரைபாலங்களில், மூன்று பாலங்களில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. பணிகள் நிலுவையில் இருப்பதால், இந்த பருவமழைக்கு நிச்சயம் வெள்ள அபாயம் உள்ளது. கால்வாயில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மற்ற திட்டங்களை போல், விருகம்பாக்கம் கால்வாய் திட்டத்தையும் கிடப்பில் போடாமல், விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை