கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, ஊனமாஞ்சேரியில், 'கிரீன் அவென்யு ஹோம்ஸ் மற்றும் கார்டன்ஸ்' நிறுவனம் சார்பில், 2013ல் குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் வீடு வாங்க, வெங்கட கிருஷ்ணன் ராமசாமி என்பவர், முன்பதிவு செய்தார். இதற்காக வீட்டின் விலையான, 73.45 லட்ச ரூபாயில், 51.41 லட்ச ரூபாயை அவர் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தத்தில் உறுதி அளித்தபடி அந்நிறுவனம் கட்டுமான பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2019ல் வெங்கடகிருஷ்ணன் ராமசாமி, புகார் அளித்தார். இதை விசாரித்த ஆணையம், 2020 ஜன., 31க்குள் வீட்டை ஒப்படைக்க கட்டுமான நிறுவனத்துக்கு, 2019ல் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்காக, 20,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை. இதையடுத்து இந்த வழக்கு ரியல் எஸ்டேட் ஆணையத்தின், தலைவர் ஷிவ்தாஸ் மீனா, உறுப்பினர்கள் எல்.சுப்ரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அமர்வு பிறப்பித்த உத்தரவு: வரும் மார்ச் 31க்குள் அனைத்து பணிகளையும் முடித்து வீட்டை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும்.மேலும், ரியல் எஸ்டேட் சட்டப்படி இந்த குடியிருப்பு திட்டம் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. ரியல் எஸ்டேட் சட்ட விதிமுறைகளை மீறியதற்காக, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு, ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.வரும் மார்ச், 31க்குள் அபராத தொகையை கட்டுமான நிறுவனம், ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.