உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திணறடிக்கும் நெரிசல் கீழ்ப்பாக்கத்தில் மேம்பாலம் அமைத்தால் தீர்வுக்கு வாய்ப்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திணறடிக்கும் நெரிசல் கீழ்ப்பாக்கத்தில் மேம்பாலம் அமைத்தால் தீர்வுக்கு வாய்ப்பு

கீழ்ப்பாக்கம்:பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கீழ்ப்பாக்கம் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க, அரசு முன்வரவேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னையில் நாளுக்குநாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பல்வேறு மேம்பாட்டு நடவடிக்ககைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.சென்னையின் முக்கிய சாலைகளான பாரிமுனை, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையாக பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. எப்போது, பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில், பூந்தமல்லி பகுதியில் துவங்கி அரும்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், பிராட்வே வரை, நாள் முழுவதும் லட்சக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியமான இந்த சாலையில், பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது.குறிப்பாக, அமைந்தகரை, பச்சைப்பா கல்லுாரியில் துவங்கி கீழ்ப்பாக்கம் வரை, எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார், பல நடவடிக்களை மேற்கொண்டாலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. பல்வேறு பகுதிகளில் சாலை விபத்தில் காயமடைவோர், இப்பகுதியில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். போக்குவரத்து நிறைந்த நேரத்தில் இப்பகுதியில் ஆம்புலன்ஸ் கடந்து செல்வது கடுமையான சவலாக நீடிக்கிறது. சாலையில், பல இடங்களில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. குறிப்பாக, அமைந்தகரை சிக்னலில் துவங்கி, கீழ்ப்பாக்கம் வரை பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. இவற்றை அகற்றினால், ஓரளவு நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. இந்த சாலையில், மதுரவாயில், கோயம்பேடு, அண்ணா நகர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே மேம்பாலங்கள் உள்ளன. குறிப்பாக, அண்ணா நகர் பகுதில், சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா வளைவில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலைக்கு, மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இதேபோல, கீழ்ப்பாக்கம் அருகிலும் மேம்பாலம் கட்டப்பட்டால், நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :சென்னையில், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வியாசர்படி, ஓட்டேரி, தி.நகரில் மேம்பாலங்கள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. கலங்கரை விளக்கம் சந்திப்பில் இருந்து சின்ன மலைக்கு, உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியே, மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர், தினமும் பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க அரசு முன்வர வேண்டும். குறிப்பாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகில் மேம்பாலம் அமைந்தால், ஆம்புலன் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு இருக்காது. இதனால், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் பெரும் அளவில் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி