கழிவுநீர் அடைப்பை சரி செய்தபோது விபரீதம் ஒப்பந்த தொழிலாளி பலி: இருவர் சீரியஸ்
கொளத்துார் :கொளத்துார் தொகுதியில், கழிவுநீர் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட, மாநகராட்சி ஒப்பந்த நிறுவன தொழிலாளி, பாதாள சாக்கடை குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் இருவர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொளத்துார், திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. நேற்று மாலை, மாநகராட்சி ஒப்பந்த நிறுவன மேலாளர் சுரேஷ்குமார், 45 தலைமையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த குப்பன், 37, சங்கர், 40, வானகரத்தை சேர்ந்த ஹரிஹரன், 28 ஆகிய மூவரும், அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதாள சாக்கடை அடைப்பை, இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது, இயந்திரத்தின் ஒரு பகுதி உள்ளே விழுந்துவிட்டது. அதை எடுக்க, குப்பன் உள்ளே இறங்கியபோது தவறி விழுந்தார். அவரை மீட்க, உடன் வேலை பார்த்த சங்கர், ஹரிஹரன் ஆகியோரும் இறங்கினர். மூவரும் கழிவுநீர் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மூவரையும் மீட்டனர். இதில், குப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சங்கர், ஹரிஹரன் ஆகியோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்த குப்பனுக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவம் குறித்து, கொளத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர். இயந்திரம் மூலம் அகற்றினார்களா; பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை நீக்கும்போது, இந்த விபரீதம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.