உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒப்பந்த நிறுவனங்கள் அலட்சிய பணியால் உள்வாங்கும் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

ஒப்பந்த நிறுவனங்கள் அலட்சிய பணியால் உள்வாங்கும் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

செம்மஞ்சேரி:ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில் இருந்து நுாக்கம்பாளையம் நோக்கி செல்லும் சாலை, 80 அடி அகலம் உடையது.ஓ.எம்.ஆர்., மெட்ரோ ரயில் பணியால், செம்மஞ்சேரி வழியாக தாம்பரம் நோக்கி செல்வோர், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், குமரன்நகர் சந்திப்பில் இருந்து பெரும்பாக்கத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இப்பணி முடிந்து மூன்று மாதங்களாகியும், பள்ளத்தை முறையாக மூடவில்லை.இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணிக்கான 35 டயர் உடைய லாரிகள், 10, 14 டயர் உடைய குடிநீர் லாரிகள் செல்கின்றன. பளு தாங்காமல், மூன்று மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கின.இரவு நேரத்தில், பள்ளம் இருப்பது தெரியாததால், பைக், கார், ஆட்டோவும் சிக்கி கொள்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இந்த சாலையில் உள்ள, 2 கி.மீ., துார பள்ளத்தை சீரமைக்க, நான்கு ஒப்பந்ததாரர்களிடம் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள், வெவ்வெறு பகுதியில் பெரிய பணிகள் எடுத்துள்ளதால், இந்த சாலை பள்ளத்தை கண்டுகொள்வதில்லை. பணி முடிந்த 300 மீட்டர் துாரத்தை முறையாக சமன்படுத்தி சீரமைக்காததால், உள்வாங்கி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணி முடிந்த உடனே, பள்ளத்தை சமன்படுத்தி சீரமைக்க வலியுறுத்தினோம். ஆனால், சில ஒப்பந்த நிறுவனங்கள் அலட்சியமாக உள்ளன. பருவமழை துவங்கியபின், ஜல்லி கொட்டி உள்ளனர். பணி முடிந்த இடங்களும் உள்வாங்குவதால், அது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை