வசூலில் கல்லா கட்டும் ஊழியர்கள் ஆவடி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
ஆவடி, ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது:கார்த்திக் காமேஷ், ம.தி.மு.க., 48வது வார்டு: மழை காலத்தில், பருத்திப்பட்டு, அன்பு நகர், அரவிந்த் நகர் பகுதியில், வெள்ளம் வெளியேற வழியின்றி குடியிருப்பை சுற்றி, முட்டி அளவுக்கு தேங்கி நிற்கிறது. வெள்ளம் வெளியேற மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். சக்திவேல், தி.மு.க., 8வது வார்டு: பொத்தூர், ஆரிக்கம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, திருமுல்லைவாயில் குளக்கரை சாலையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், கனரக வாகனம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, குளக்கரை சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும். பிரகாஷ், அ.தி.மு.க., 1வது வார்டு : ஆவடி முத்தாபுதுபேட்டை பகுதியில், பல மாதங்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நேரங்களில் வீடுகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. புகார் அளித்த பின், இரண்டு சாலைகளில்மட்டும் அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தெருக்களில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திரன், தி.மு.க., 42வது வார்டு: ஆவடி மாநகராட்சியில், உதவி வருவாய் அலுவலர் பற்றாக்குறை உள்ளது. தற்போது பணிபுரிந்து வரும் இருவரும் முறைகேடில் ஈடுபடுகின்றனர்.அவர்கள், வீட்டுவரி பில் போடுவதற்கு ஒரு ரேட், பில் போடாமல் இருக்க ஒரு ரேட், வீட்டை அளந்து வரிபோட ஒரு ரேட், அளக்காமல் வரிபோட ஒரு ரேட் என பணம் வசூலித்து வருகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசிய போது, அனைத்து கவுன்சிலரும் வரவேற்று மேசையை தட்டினர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் கந்தசாமி, உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சுமதி, தி.மு.க., 44வது வார்டு: எங்கள் வார்டில், புதைவட கேபிள் பதிக்கும் பணி முடிந்துள்ளது. இதனால், பல தெருக்களில் மின் கம்பங்கள் ஆபத்தான வகையில் சாலையில் சாய்ந்துள்ளன. இதுகுறித்து மின் வாரியத்தில் புகார் அளித்தால், மாநகராட்சி தான் சரி செய்ய வேண்டும் என்கின்றனர். சாய்ந்துள்ள மின்கம்பங்களை தற்காலிகமாவது சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.மதுரை ஆறுமுகம், அ.தி.மு.க., 25வது வார்டு: எங்கள் வார்டில் 80 சதவீதம் பேர் முறையாக வரி கட்டுகின்றனர். ஆனால், குப்பை அப்புறப்படுத்துவதற்கு வண்டி இல்லை. உணவு விடுதிகளில் முறையாக குப்பையை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், வீடுகளில் சேரும் குப்பையை அப்புறப்படுத்த தயங்குகின்றனர். புதைவட கேபிள் பதிக்கும் பணியால், அண்ணனூர் 60 அடி சாலை பலத்த சேதமடைந்து உள்ளது அதை சீரமைக்க வேண்டும்.ஜெயப்ரியா, தி.மு.க., 7வது வார்டு: திருமலைவாசன் நகரில், புதைவட கேபிள் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. மழையால், சாலை போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. எனவே, இந்த பிரதான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறுகூட்டத்தில்கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.கூட்டத்தில்மொத்தம் 119 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.