சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அறிவிப்பின்றி இடித்ததாக கவுன்சிலர் போராட்டம்
தாம்பரம் : மேற்கு தாம்பரம், முத்துரங்கம் முதலி தெரு மற்றும் பின்புறம் ராஜாஜி சாலைகளில், இருபுறத்திலும் ஏகப்பட்ட சாலையோர கடைகள் போடப்பட்டுள்ளதால், 'பீக் அவர்' நேரத்தில் நெரிசல் ஏற்படுகிறது. அதனால், அதிகாரிகள், பொதுமக்கள், அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. எனவே, கடைகள் அகற்றப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டு, பூச்செடிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. மேலும், அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ராஜாஜி சாலையில், மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கடைகள் அகற்றப்பட்டு, அங்கும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, ராஜாஜி சாலையின் மறுபுறத்தில் நடைபாதை அமைக்க வசதியாக, சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர். இந்நிலையில், வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இடித்து விட்டதாகவும், பொருட்களை எடுத்து சென்று விட்டதாகவும் கூறி, 50வது வார்டு கவுன்சிலர் யாக்கூப், வியாபாரிகளுடன் சேர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். மாநகராட்சி கவுன்சிலர் யாக்கூப்பிடம் கேட்டபோது, ''கடைக்காரர்களுக்கு முறைப்படி அறிவிப்பு செய்துவிட்டுத் தான், ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், வியாபாரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினோம்,'' என்றார். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ராஜாஜி சாலையில், பத்து நாட்களுக்கு முன் போடப்பட்ட சாலையை, ஒரு கடைக்காரர் பள்ளம் தோண்டி சேதப்படுத்தி விட்டார். நேற்று காலை, அந்த கடைக்கு 'சீல்' வைக்க சென்ற போது, அருகேயிருந்த மற்ற கடைகளின் ஆக்கிரமிப்புகளும் இடிக்கப்பட்டன' என்றனர்.
கட்டட உரிமையாளர் மீது புகார்
ராஜாஜி சாலையை ஒட்டியுள்ள வணிக வளாக உரிமையாளரும், தி.மு.க., பிரமுகருமான ரமேஷ் என்பவர், மாநகராட்சி அனுமதியின்றி, புதிதாக போடப்பட்ட தார் சாலையை துண்டித்து, தன்னிச்சையாக பாதாள சாக்கடை இணைப்பு போட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், ரமேஷ் மீது, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சனிடம், நேற்று புகார் அளித்தார். இப்புகார் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில், இதேபோல் அனுமதியின்றி பாதாள சாக்கடை இணைப்புகளை தி.மு.க.,வினர் ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.