சித்ரவதை செய்து சிறுமி கொலை தம்பதியுடன் 6 பேருக்கு குண்டாஸ்
சென்னை:வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சிகரெட்டால் சூடு வைத்து, கொடூரமாக கொலை செய்த ஆறு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சென்னை, அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்த நாசியா, 30; முகமது நிஷாத்,36 ஆகியோர் வீட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். தம்பதிகளான அவர்கள், சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும், அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து, முகமது நிஷாத்தின் நண்பர் லோகேஷ், 26, அவரின் மனைவி ஜெயசக்தி, 24, வீட்டு வேலைக்கார பெண் மகேஸ்வரி,40, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம், 39, ஆகியோரும் சிறுமியை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.இவர்கள் தாக்கியதில், அக்.,31ல் சிறுமி உயிரிழந்தார். இதனால், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நசியா உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி ஆறு பேரும் நேற்று, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.