உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமின்

தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமின்

சென்னை, அண்ணாநகர் அருகே, சொகுசு காரை ஏற்றி கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் நிதின்சாய், 19. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால், இவரை கடந்த மே 29ம் தேதி, கல்லுாரி மாணவர் சந்துரு என்பவர் காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சந்துரு, சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரும் கவுன்சிலருமான தனசேகரனின் பேரன். ஜாமின் கோரி இரண்டு முறை சந்துரு தாக்கல் செய்த மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஜாமின் கோரி சந்துரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் ஆஜராகி, 'இறந்தவரின் நண்பர்கள் பைக்கில் வந்து, சந்துரு, அவரது நண்பர்கள் வந்த கார் மீது கல்லை எறிந்து, தகராறில் ஈடுபட்டனர். தற்காப்புக்காக, காரை வேகமாக இயக்கியபோது, துரதிர்ஷ்டவசமாக நிதின்சாய் வாகனம் மீது, கார் மோதியது. சந்துரு காரை ஓட்டவில்லை. கடந்த 40 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்' என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, சந்துருவை 10,000 ரூபாய் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். அவர் தினமும் காலை 10:00 மணிக்கு திருமங்கலம் காவல் நிலையத்தில், மறு உத்தரவு வரும்வரை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்ககூடாது; தலைமறைவாக கூடாது என்பன போன்ற நிபந்தனைகளை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை