உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீண்டும் சாலையில் மாடுகள் உலா ஆவடி, பூந்தமல்லியில் விபத்து அபாயம்

மீண்டும் சாலையில் மாடுகள் உலா ஆவடி, பூந்தமல்லியில் விபத்து அபாயம்

பூந்தமல்லி, ஆவடி மாநகராட்சி சாலைகளில், கால்நடைகள் மீண்டும் சாலையில் உலா வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஆவடி மாநகராட்சி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். இதை தடுக்கும் வகையில், சாலையில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, மாடுகளுக்கு 10,000 ரூபாயும், கன்றுக்குட்டிகளுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டன.மாநகராட்சி ஊழியர்களால் சிறை பிடிக்கப்பட்ட மாடுகள் திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில் உள்ள, மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.அந்த வகையில், 33 மாடுகள் மற்றும் 14 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டு, அதன் வாயிலாக மாட்டின் உரிமையாளர்களுக்கு 3.24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அபராத தொகை கட்டிய உரிமையாளர்களிடம், மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.இந்நிலையில், கடந்தாண்டு அக்., மாதத்திற்குப் பின், ஆவடி மாநகராட்சியில் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், சாலையில் கால்நடைகள் உலா வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, ஆவடி -- கண்ணப்பாளையம் சாலை, சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி -- பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகர் சாலை, ஆவடி பேருந்து நிலையம், புதிய ராணுவ சாலைகளில் அதிக அளவில் மாடுகள் உலா வருகின்றன.கடந்த 10 நாட்களுக்கு முன், ஆவடி -- கண்ணப்பாளையம் அருகே, இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற சோராஞ்சேரியைச் சேர்ந்த பழனி என்பவர், சாலையில் திரிந்த மாடுகளால் நிலை தடுமாறி கீழே விழுந்து, இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அதேபோல், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் சென்னீர்குப்பம் சாலைகளில் கால்நடைகள் அதிக அளவில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் பீதியுடன் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கால்நடைகள் சாலையில் உலா வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ