உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது

சென்னை, தனியார் காப்பீடு நிறுவனத்தில் போலியாக விபத்து காப்பீடுகள் தயாரித்து பணமோசடி செய்த வழக்கில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டை கிளப் ஹவுஸ் சாலையில் 'ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்' உள்ளது. இதன் அதிகாரி சீனிவாசன் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்த் ரெங்கநாதன் என்பவர், விபத்து காப்பீடு வழக்கில் போலியான ஆவணங்களை தயாரித்து, பரிந்துரையாளர்களின் கையொப்பத்தை அவரே போலியாக போட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களில், 37 காசோலைகள் பெற்று, 64.75 லட்சம் ரூபாய் கையாடல் செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார். எனவே மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு போலீசார், வழக்கில் தொடர்புடைய, 15 பேரை கைது செய்தனர். பின் ஜாமீனில் வெளியே வந்த நித்தியானந்தம், 34 முறை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, மார்ச், 5ம் தேதி சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவான நித்தியானந்தத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி