சமையல் ஒலிம்பியாட் போட்டி துவக்கம்
சென்னை:தென்னிந்திய செப் அசோசியேஷன் சார்பில், ஏழாவது சமையல் ஒலிம்பியாட் மற்றும் உணவு போட்டிகள், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், மாலத்தீவு, மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 3,000 சமையல் வல்லுநர்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, சமையல் வல்லுநர்கள், மாணவர்களால் தயாரிக்கப்பட்ட, இரண்டு மற்றும் மூன்று அடுக்கு திருமண கேக், வெண்ணெயால் செய்யப்பட்ட சிற்பங்கள் போட்டியில் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்கள் சார்பில், 40க்கும் மேற்பட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. சமையல் ஒலிம்பியாட் போட்டியை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தின் விருந்தோம்பல் மற்றும் சமையல் கலை தரத்தை, சர்வதேச தரத்தில் உயர்த்துவது, இந்த நிகழ்வின் நோக்கம். பல்வேறு நாடுகளை சேர்ந்த சமையல் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் இப்போட்டியில் பங்கேற்பது, உணவு கலாசார பரிமாற்றத்திற்கான முயற்சி. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், செப் தாமு பேசியதாவது: மாணவர்களை ஊக்கப்படுத்துவதும், கலாசார பரிமாற்றமும்தான் இந்த நிகழ்வின் நோக்கம். பல்வேறு நாடுகளை சேர்ந்த, 22 சமையல் கலை வல்லுநர்கள், போட்டியில் பங்கேற்றுள்ளனர். சிறுதானியங்களை மையப்படுத்தும் கிராமப்புற உணவுகள் உட்பட, 22 வகை பிரிவுகளில், வல்லுநர்கள் போட்டியிட உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.