திருட்டு மொபைல் லாக் எடுக்க மறுப்பு சர்வீஸ் கடை ஊழியருக்கு வெட்டு
மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த கீழக்கரணையைச் சேர்ந்தவர் ஷியாம், 30. அதே பகுதியில் மொபைல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, தன் அண்ணன் பாலு, 44, என்பவருடன் கடையில் இருந்த போது, அங்கு வந்த இருவர், மொபைல்போனை கொடுத்து, 'பேட்டர்ன் லாக்' எடுத்து தரும்படி கேட்டுள்ளனர்.இதற்கு ஷியாம், அவர்களின் ஆதார் அட்டையை தரும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாலுவின் இடது கையில் கத்தியால் வெட்டி தப்பினர்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஷியாமை சேர்த்தனர். வழக்கு பதிந்த மறைமலை நகர் போலீசார், கீழக்கரணை வாசு, 27, சிங்கபெருமாள் கோவில் சல்மான், 24, ஆகிய இருவரையும், நேற்று காலை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:வாசுவும், சல்மானும் இணைந்து, தெள்ளிமேடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், 33, என்பவரை தாக்கி, அவரது 'ரியல்மீ' மொபைல் போனை பறித்து தப்பினர். அதை 'லாக்' எடுக்க சென்றபோது ஏற்பட்ட சண்டையில், பாலுவை வெட்டியுள்ளனர்.இருவரும் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.