உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமடைந்த தாசில்தார் அலுவலகம் மாற்று இடத்தில் நிரந்தர கட்டடம்?

சேதமடைந்த தாசில்தார் அலுவலகம் மாற்று இடத்தில் நிரந்தர கட்டடம்?

திருவொற்றியூர்அரசு கல்லுாரி, நீதிமன்றத்தை தொடர்ந்து, தாசில்தார் அலுவலகத்திற்கான நிரந்தர கட்டடம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.திருவொற்றியூரில், கத்திவாக்கம், எர்ணாவூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 3.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதிகளை சேர்ந்த மக்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு திட்டங்கள், ஆவணங்கள் பெற, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும், தாசில்தார் அலுவலகம் வர வேண்டியுள்ளது.இந்நிலையில், மாநகராட்சி வணிக வளாக கட்டடம் பழமை காரணமாக, ஆங்காங்கே கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, பலவீனமாக உள்ளது. மழைக் காலங்களில், மழைநீர் கசிவு ஏற்பட்டு, ஆவணங்கள் சேதமாகும் சூழலும் உள்ளது.மேலும், பொங்கலுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வினியோகிக்கப்படும், விலையில்லா வேட்டி - சேலைகள் அடுக்கி வைக்கக்கூட, இங்கு இடம் கிடையாது. துார்ந்து போன படிக்கட்டுகள், துருப்பிடித்த இரும்பு கைப்பிடிகள் என, தாசில்தார் அலுவலகம் கவலைக்கிடமாக உள்ளது.இதனிடையே, மாநகராட்சி பள்ளி கட்டடத்தில் இயங்கி வந்த, திருவொற்றியூர் அரசு கலைக் கல்லுாரிக்கு, ரீட் கூட்டுறவு இடத்தில், புதிய நிரந்தர கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது.அதேபோல், வாடகை கட்டடத்தில் இயங்கும், திருவொற்றியூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திற்கும், கூட்டுறவு இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்துள்ளது.இந்நிலையில், திருவொற்றியூரில் அதிக மக்கள் புழங்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும், ரீட் கூட்டுறவு இடத்தில், நிரந்தர கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று, தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ