மழை விட்டும் வடியாத கழிவு நீரால் ஆபத்து
ஆவடி: ஆவடி மாநகராட்சி, 12வது வார்டு கோவில்பதாகை, கலைஞர் நகர் இரண்டாவது தெருவில், மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் அமல்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், அப்பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவு நீரும் கலந்து தேங்கியது. மழை விட்டு ஒரு வாரமாகியும், அப்பகுதியில் கணுக்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து 'மலேரியா' போன்ற உயிர் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.