இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் சென்னையில் தொடரும் அதிர்ச்சி
காசிமேடு,ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, கடற்கரை பகுதிகளுக்கு வந்து ஆமைகள் முட்டையிடும். அந்தவகையில் சென்னை கடற்கரை பகுதியில், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்வது உண்டு. கடற்கரையில் அவை விட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அடைகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுகின்றனர்.இந்நிலையில், காசிமேடு கடற்கரை பகுதியில், 20க்கும் மேற்பட்ட ஆமைகள் நேற்று முன்தினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. 'கடற்கரை நோக்கி வரும் போது, அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகுகளிலும், வலைகளிலும் சிக்கி உயிரிழந்திருக்கலாம்' என, வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.காசிமேடு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் அழுகிய நிலையில் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கடற்கரை பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே, வனத்துறையினர் ஆமைகளை அகற்ற உடனே நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.