சென்னை: சென்னை பெருநகரில் போக்குவரத்தை முறைப்படுத்தும் வழிமுறைகளை வகுக்க, பல்வேறு துறைகள் அடங்கிய புதிய பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. சாலைகள் சரியாக இல்லை, குறுகலான சாலைகள், வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் என, பல்வேறு காரணங்கள் கூறப்படு கின்றன. இந்நிலையில், மாநில திட்டக்குழுவின் சமீபத்திய கூட்டத்தில், போக்குவரத்து குழுமமான 'கும்டா'வின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து, போக்குவரத்து குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் போக்குவரத்து மேலாண்மையில், வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்த, பகுதி வாரியாக திட்டங் கள் தயாரித்து வருகிறோம். முக்கிய சந்திப்புகளில் நெரிசலை தடுக்க, சில புதிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது . இதற்கான பரிந்துரைகள் வழங்க, போக்குவரத்து காவல் துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, சி.எம்.டி.ஏ., போன்ற பல்வேறு துறைகள் அடங்கிய சிறப்பு பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிக்குழு, 10 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி, முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கும். இதன் அடிப்படையில், விரிவான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ஜன., 20க்குள் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் புதிய வழிமுறைகள் அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.