அழுகிய நிலையில் வாலிபர் உடல் ஸ்டான்லி ஜி.எச்., கிடங்கில் மீட்பு
ராயபுரம் :ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கிடங்கில், அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தினமும் 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை மருந்தகம் எதிரே உள்ள பழைய கிடங்கில், மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கட்டில், டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்கில் இருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் சென்று பார்த்தபோது, 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல், அழுகிய நிலையில் கிடந்துள்ளது. வண்ணாரப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.