கடத்தல் லாரியை விரட்டி பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி., பாராட்டு
சென்னை,மறைமலை நகரில் மனநலம் பாதித்தவர் ஓட்டிய லாரியை, மடக்கி பிடித்த சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டினார்.மறைமலை நகர் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., லோகேஷ் காந்தி, காவலர் மோகன்ராஜ் ஆகியோர், 20ம் தேதி மஹிந்திரா சிட்டி, ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.பரனுார் சுங்கச்சாவடியில் இருந்து டிப்பர் லாரி, போக்குவரத்து சிக்னலை பின்பற்றாமலும், பலமுறை எச்சரித்தும் நிறுத்தாமலும் செல்வதாக தகவல் கிடைத்தது. சிறப்பு எஸ்.ஐ., முருகன், லாரியை தடுப்புகள் வைத்து நிறுத்த முயன்றதால், லாரி வேகம் குறைந்தது. உடனடியாக லாரியின் படியில் ஏறியுள்ளார்.லாரி நிற்காமல் வேகமாக ஓடியதால், 10 கி.மீ., துாரம் படியில் பயணித்து, தடுப்பு சுவரில் மோதி நின்றது. லாரி ஓட்டிய நபரை பிடிக்க முயன்றபோது, இரும்பு கம்பியை எடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசாரை மிரட்டியுள்ளார்.அவரை பிடித்தப்போது, திருநெல்வேலியை சேர்ந்த சுபாஷ், 35 என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ., முருகன், எஸ்.ஐ., லோகேஷ், காவலர் மோகன்ராஜ் ஆகியோரை, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.