உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வயிற்றுப்போக்கால் மீண்டும் பீதி! திருவொற்றியூரில் ஒருவர் பலி

வயிற்றுப்போக்கால் மீண்டும் பீதி! திருவொற்றியூரில் ஒருவர் பலி

திருவொற்றியூர்; வயிற்றுப்போக்கால் சென்னை மக்கள் பீதிக்குள்ளாவது தொடர்கிறது. ஏற்கனவே, சைதாபேட்டையில் ஒரு சிறுவன்; பல்லாவரத்தில் மூன்று பேர் பலியான நிலையில், வயிற்றுப்போக்கு பாதிப்பால், திருவொற்றியூரில் மூதாட்டி ஒருவர் நேற்று பலியானார்; 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் கடந்த ஆண்டு, ஜூன் 29ம் தேதி, சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய, 11 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்தான். அவனது, 7 வயது தங்கையும் பாதிகப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறினார்.அதேபோல், கடந்த மாதம் 6ம் தேதி பல்லாவரம் பகுதியில், கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி, 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்; இதில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.குடிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னை பெரிதானதால், மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதுபோன்ற பாதிப்பு நேற்று, திருவொற்றியூரிலும் அரங்கேறியுள்ளது.சென்னை, திருவொற்றியூர் குப்பம் துலுக்காணத்தன் கோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, அப்பர் நகர் மற்றும் பட்டினத்தார் கோவில் தெரு பகுதிகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.இப்பகுதியில், குடிநீர் வாரியம் அடி பம்பு வழியாக குடிநீர் வினியோகம் செய்கிறது. சில வாரங்களாக, குளோரின் கலக்காமல், குடிநீர் வினியோகிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 29ம் தேதி, இந்த குடிநீரை பயன்படுத்திய அப்பகுதிகளைச் சேர்ந்த தேசப்பட்டு, 74, லட்சுமி, 65, வேணுகோபால், 45, அன்பு, 53, சந்திரசேகர், 55, அஞ்சலை, 70. ராமாயி, 45, ஜெயலட்சுமி, 38 உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, கடும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக, திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் வயிற்றுப்போக்கு சரியாகததால், மேல் சிகிச்சைக்காக, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சிகிச்சை தொடர்ந்த நிலையில், திருவொற்றியூர் குப்பம், துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி தேசப்பட்டு, 74, உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 31ம் தேதி, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்.நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், 50, உட்பட நால்வர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு, திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இறந்த தேசப்பட்டு, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், சிறுநீரக தொற்று, நீரிழிவு நோயால் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், 'காலரா நோயால்தான் தேசப்பட்டு உயிரிழந்துள்ளார்; அவரது உடலை ஊருக்குள் கொண்டு வராமல், நேராக மயான பூமிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என, அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.தகவலறிந்து, மண்டல உதவி ஆணையர் புருஷோத்தமன், சுகாதார அதிகாரி லீனா தலைமையில், 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், அப்பர்சாமி கோவில் தெரு அருகே, மயானபூமி பகுதி, கடற்கரை பகுதிகளில், செடி, கொடி, மற்றும் குப்பையை அப்புறப்படுத்தினர். மேலும், சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில், குடிநீர் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பகுதிகளில், பெரிய அளவிலான வயிற்றுப்போக்கு, வாந்தி இல்லை. அதேநேரம், ஒருசிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் பகுதிகளில், குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. உணவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உணவு வாங்கிய ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை வாயிலாக சோதனை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.கேன் குடிநீர் பயன்படுத்திய யாரும் பாதிக்கப்படவில்லை. குடிநீர் வாரியம் வினியோகித்த நீரை அருந்தியவர்கள்தான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் குழாய் உடைந்துள்ளது. சில நேரங்களில், அடி பம்பில் வரும் நீர், கழிவு கலந்து வருகிறது. - எஸ்.சுனிதா, 35,அப்பர் சாமி கோவில் தெருதிருவொற்றியூர் குப்பம் பகுதி மக்கள், ஆறு நாட்களாக வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தோம். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட பின், மாநகராட்சி ஊழியர்கள் இங்கு சுத்தம் செய்கின்றனர். - இ.சுரேகா, 31,திருவொற்றியூர் குப்பம்திருவொற்றியூர் மயானத்திற்கு பின்புறம் வசிக்கிறோம். மயான பகுதியில் மலைபோல் குப்பை குவிந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. தெருக்களில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்தான் இதற்கு காரணம்.- கே.தேசராணி, 32,அப்பர் சாமி கோவில் தெரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை