உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெடுஞ்சாலைகளில் அத்துமீறி வைக்கப்படும் பேனர்கள்; கட்சியினருக்கு கடிவாளம் போடாததால் அதிருப்தி

நெடுஞ்சாலைகளில் அத்துமீறி வைக்கப்படும் பேனர்கள்; கட்சியினருக்கு கடிவாளம் போடாததால் அதிருப்தி

கூடுவாஞ்சேரி : சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், சாலையோரங்களில் அத்துமீறி வைக்கப்படும் பேனர்களால், விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலை, அதன் அணுகு சாலைகளில், விளம்பர பேனர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்., 24ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், மார்ச் 1ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் போட்டிபோட்டு பேனர்களை வைத்தனர். இவ்வாறு, 500க்கும் மேற்பட்ட பேனர்கள், நடைபாதை மற்றும் வாகன வழித்தடங்களை மறித்து வைக்கப்பட்டன. இந்த பேனர்கள், பல மாதங்களைக் கடந்தும் அகற்றப்படாமல், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால், அடுத்தடுத்து வரும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக, மீண்டும் மீண்டும் பேனர்களை வைப்பது தொடர்கதையாக நீடிக்கிறது. தற்போதும், நுாற்றுக்கணக்கான பேனர்கள் உள்ளன. இதேபோல், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி முதல் இருங்காட்டுக்கோட்டை வரை, சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்கள் மீது, அதிக அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மேவளூர்குப்பம், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களும் தங்கள் இஷ்டம் போல் விளம்பர பேனர்களை அமைத்துள்ளன. புறநகர் பகுதிகளின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அரசியல் கட்சியினரைப் பார்த்து, பொதுமக்களும் கோவில் திருவிழா, பிறந்த நாள், காது குத்து, திருமணம் என, தங்கள் பங்கிற்கு பேனர்களை வைப்பது, தற்போது பிரபலமாகி வருகிறது. இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்லது விழா முடிந்தும் அகற்றப்படுவதில்லை. அவை, வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், சூறை காற்று வீசும் போது, இந்த பேனர்கள் பெயர்ந்து சாலையில் விழும் ஆபத்து உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மெகா சைஸ் விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை