உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்னிகாபுரத்தில் கொட்டப்பட்டுள்ள பயன்பாடற்ற பொருட்களால் சீர்கேடு

கன்னிகாபுரத்தில் கொட்டப்பட்டுள்ள பயன்பாடற்ற பொருட்களால் சீர்கேடு

கே.கே., நகர்: கே.கே., நகர் கன்னிகாபுரத்தில் கொட்டப்பட்டுள்ள பயன்பாடற்ற பொருட்கள் மற்றும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு கே.கே., நகரில் கன்னிகாபுரம் உள்ளது. இங்கு கே.கே., நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சோபா, மெத்தை உள்ளிட்ட பயன்பாடற்ற பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளன. அதன் அருகே கழிவுமண், குப்பை கழிவுகளும் குவிக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால், அப்பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையின் போது, பயன்பாடற்ற பொருட்களில் தேங்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதே சாலையின் இன்னொரு புறம், பழுதடைந்த ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இந்த ஆட்டோக்கள் திறந்த வெளி மதுக்கூடமாக மாறி விடுகின்றன. எனவே, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆட்டோக்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஷெனாய் நகரில் கழிவுகள் தேக்கம் அண்ணா நகர் மண்டலம், டி.பி., சத்திரம் அருகில் ஷெனாய் நகர், கிழக்கு கிளப் சாலை உள்ளது. இங்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளம், டி.பி.,சத்திரம் கிறிஸ்தவ கல்லறை, குடிநீர் வாரிய அலுவலகம், புதிதாக கட்டி வரும் வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையோரத்தில் குப்பை, மரக்கழிவுகளை கொட்டி கிடங்காக மாற்றி வருகின்றனர். அவ்வப்போது, ஊழியர்கள் அகற்றினாலும், அத்துமீறி கழிவுகளை கொட்டி சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை