உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 6 மாதங்களில் நாய் கடிக்கு ஆளானோர்...39,259 பேர்:சாலையில் நடமாடவே மக்கள் அச்சம்

6 மாதங்களில் நாய் கடிக்கு ஆளானோர்...39,259 பேர்:சாலையில் நடமாடவே மக்கள் அச்சம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில், 6 மாதங்களில், 39,259 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சியில் மட்டும், 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பது, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்த்து, ஐந்து லட்சம் தெரு நாய்கள் வரை இருக்கலாம் என, கால்நடை டாக்டர்கள் கூறுகின்றனர்.தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிறுவர் - சிறுமியர் ஆகியோரை, கடித்து துரத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிப்பது, அதனால் விபத்து ஏற்படுவது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.சென்னை போன்ற நகரங்களில் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நாய் கருத்தடை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தினமும் 10 முதல் 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும், வெறிநாய் கடி பாதிப்பை தடுக்க, ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டு, ஒட்டுண்ணி நீக்கப்பட்டு வருகிறது.அதேசமயம், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில், சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டினாலும், அருகாமையில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.ஆறு மாதங்களில் சென்னை மாநகராட்சியில், 5,970 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகாமை மாவட்டங்களில் இதன் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், 39,259 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒருவர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்துள்ளனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 20,000க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும், புகாரின் அடிப்படையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், தெரு நாய்கள் தொல்லை என, 25,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.தெரு நாய்களுக்கு ரேபீஸ் நோய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடப்படுவதுடன், நாய் கடியால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் தெரு நாய் கடி குறைந்து இருப்பதுடன், உயிரிழப்புகள் இல்லாத நிலை உள்ளது. தொடர்ந்து, தெரு நாய்கடி பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னையில் நாய்கடிக்கு ஆளானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், தெரு நாய்களின் பெருக்கம் குறைந்ததாக தெரியவில்லை. தெருக்களில், நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியவில்லை. நாய்கள் எல்லாம் வெறிபிடித்து அலைகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் நாய்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. மற்ற மாவட்டங்களிலும், நாய்களை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாப்பாடு கொடுத்தா மட்டும் போதுமா?

விலங்கின பிரியர்கள், அவர்களது வளாகத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாய்களை வளர்க்கலாம்; அதில் தவறில்லை. ஆனால், நாய் பிரியர்கள் எனக்கூறி கொண்டு, தெருநாய்களுக்கு உணவு அளிப்பதோடு நிறுத்தி விடுகின்றனர். அந்நாய்க்கு இருப்பிடமோ, தடுப்பூசியோ, நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவோ, அவர்கள் முயற்சிப்பது இல்லை. இதனால், உணவு கிடைக்காத நேரங்களிலும், மிரட்டலுக்கு உள்ளான நேரங்களிலும் அவ்வழியே செல்வோரை தெருநாய்கள் கடித்து விடுகின்றன.எனவே, நாய் வளர்க்க விரும்புவோர் தெருநாய்களை தத்தெடுத்து, அவற்றிற்கு முறையாக உணவளிப்பது, தடுப்பூசி போடுவதுடன், நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.- செல்வவிநாயகம், இயக்குநர், தமிழக பொது சுகாதாரத்துறை

நாய் கடி சம்பவம்

ஜூன் 15:திருவல்லிக்கேணி வெங்கடசாமி தெருவில் வசிக்கும் லட்சுமிஎன்பவருக்கு சொந்தமான சிப்பிபாறை நாய், டாக்டர் நடேசன் சாலையில் வசிக்கும் தர்மன் என்பவரின் 15 வயது மகளின் தொடையை கடித்து குதறியது. ஜூன் 3: மூலக்கொத்தளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் நடைபயிற்சிக்கு அழைத்து சென்ற நான்கு ராட்வீலர் நாய்கள் அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துவை 34, துரத்தி துரத்தி கடித்ததில் இரண்டு கைகளிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஏப்.,12:கொரட்டூர் பாலாஜி நகர் சாலையில் விளையாடிய 4 வயது சிறுமியை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறின. முகம் மற்றும் காலில் காயம் அடைந்த சிறுமி பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏப்.,7:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமம் புதுகாலனியைச் சேர்ந்தவர் சிவசங்கர் 38. இவரது மகன் விஸ்வா 13. வடக்குப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்.,7 ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் வீ்ட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தெரு நாய் ஒன்று விஷ்வாவின் வலது கையில் கடித்தது. ரெட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்கடிக்குரிய தடுப்பூசி போட்டுள்ளார். இரண்டாவது தடுப்பூசி ஏப்.,10 ம் தேதி அன்று போட்டு உள்ளார். அப்போது அவருக்கு தலைவலி என மாத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு இணை நோய் இருந்ததால் இறந்து இருக்கலாம் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார். மார்ச் 31: புழல் அருகே புத்தகரம் ராஜம்மாள் நகரை சேர்ந்த மாரியப்பன் 72, மீது அவரது வீட்டருகே வசிக்கும் வழக்கறிஞர் கவியரசன் தான் வசிக்கும் ராட்வீலர் வகை நாயை ஏவி கடிக்க வைத்தார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V RAMASWAMY
ஜூன் 23, 2025 14:55

All State Governments should come out with a policy to control dog menace, be it stray dogs or pet dogs. Animal Welfare Board also should not be rigid in their rules and regulations in such a way that pet lovers take advantage and exploit. Even in Apartments RWAs are unable to say NO to pets. In many Apartments pet lovers are so rude and nonchalant that they do not bother about welfare of other residents not only dogs, even cats are allowed to cause lots of nuisance by defecating anywhere and everywhere much to the annoyance and unhygienic condition in common areas and in front of flats. Are human lives so cheap as to let go animals scot free? Governments should catch stray dogs and cats and leave them in the offices of Animal Welfare Boards, Blue Cross etc. It is dangerous for humans if this situation is allowed to continue. Necessary statute is essential to protect citizens from violent animals and their pet-parents who have a tendency to exploit the present Laws that give them free hand with no care for others that include children, senior citizens and handicapped persons who become victims.


Iyer
ஜூன் 23, 2025 07:44

தினமும் ஒவ்வொரு வீட்டிலும் தெரு நாய்க்கு ஒரு பிடி சோறோ அல்லது ஒரு ரொட்டியோ கொடுத்தால் நாய் கடி பிரச்னை முழுவதும் தீரும். பசியால் திரியும் நாயகள் கோபத்தில் கடிக்கின்றன.


புதிய வீடியோ