சென்னை :நீர்வளத்துறை சரியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், புழல் ஏரிக்கரை பெரிதும் சேதமடைந்துள்ளது. தற்காப்புக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகளும் சரிந்து விழுவதால், கரை பலம் இழந்து பருவ மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் புழல் ஏரி முக்கியமானது. மொத்தம், 20.27 சதுர கி.மீ., நீர்பரப்பு, 21 அடி உயரம் கொண்ட இந்த ஏரி, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஏரி கரையின் நீளம் 7,090 மீட்டர். தற்போது 2.77 டி.எம்.சி., அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளும் பூர்த்தி செய்கின்றன. இந்த இரண்டு ஏரிகளுக்கு அருகிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. எனவே, இந்த ஏரிகளில் இருந்து கால்வாய்கள் வாயிலாக, புழல் ஏரிக்கு நீர் எடுத்து செல்லப்படுகிறது.சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு நீர்வரும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. அவற்றில், பல இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது. பல இடங்களில் கால்வாய்களின் கரைகள் உடைந்துள்ளன. சில இடங்களில் மணல் மூட்டைகளை வைத்து நீர்வளத்துறையினர் சமாளித்துள்ளனர். அந்த மணல் மூட்டைகளும் சமீபத்திய மழையால் சாலையில் சரிந்துள்ளது.மேலும், கரையின் பல பகுதிகள் கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளன. அந்தப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அளவு துர்நாற்றம் பரவி கிடப்பதுடன், கரையை சேதமாக்கும் வகையில் பெரிய மரங்கள், செடிகள் வளர்ந்துள்ளன. கரையில் 1 கி.மீ., துாரத்தை அப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றியுள்ளனர். அதனால், அங்கு யாரும் வர முடியாதபடி, கரையின் மேல் ஆணி மற்றும் பாட்டில்களையும் உடைத்து போட்டுள்ளனர்.மேலும், புழல் ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் கால்வாயும் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் இன்னும் முடியவில்லை. புழல் ஏரி மட்டுமின்றி உபரி நீர் கால்வாய்களையும் பாதுகாக்க வேண்டிய நீர்வளத்துறையினர், தொடர்ந்து துாக்கத்திலேயே உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுக்கு முன், புழல் ஏரி கரைகளில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு, புதர், செடி, கொடிகள் அகற்றப்பட்டன. அதன்பின், தற்போது வரை எந்த பாதுகாப்பு பணிகளும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துாக்கத்தை கலைத்து, சீரமைப்பு பணிகளை செய்யாவிட்டால், வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் புழல் ஏரிக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். புழல் ஏரியை முறையாக நாங்கள் பராமரிக்க விரும்புகிறோம். இதற்கான பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நீர்வளத்துறை செயலர் வாயிலாக, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.ஆனால், புழல் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு தேவையான நிதியை நிதித்துறை வழங்கவில்லை. கடந்தாண்டு வழங்கிய நிதியில், புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் சீரமைப்பு, புயலில் சேதமான தடுப்புசுவர் சீரமைப்பு போன்ற சிறிய அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உரிய நிதி கிடைத்தால், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தனியார் வாயிலாக, ஏரி கரையை பராமரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. ஏரிகரையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக பூங்கா அமைக்கும் பணிகள் ஆமைவேகத்தில் நடக்கிறது. அதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, புதர்களை அகற்றம் பணிகள் துவங்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ரெட்டேரி துார்வாரும் பணி
நிலத்தடிநீர் மட்டம் சரிவு தற்போது, 700 ஏக்கர் பரப்பளவு உள்ள மாதவரம் ரெட்டேரியின் கொள்ளளவை உயர்த்தும் வகையில், 48 கோடி ரூபாயில் பணிகளை நீர்வளத்துறை துவக்கியுள்ளது. பருவ மழைக்கு முன் பணிகளை முடிக்கும் வகையில், ரெட்டேரியின் ஒரு பக்கம் ஏரியை ஆழப்படுத்தும் வகையில் துார்வரப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் மந்த கதியில் நடப்பதால், மழைக்காலத்திற்குள் பணி முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மண் எடுத்து துார்வாரும் பணியால், ரெட்டேரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம், மூன்று மடங்கு கீழே சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ரெட்டேரியை சுற்றியுள்ள விநாயகபுரம், லட்சுமிபுரம், திருமலைநகர், சாஸ்திரி நகர், செகரட்டரிடியேட் காலனி, தேவகி நகர், பால கிருஷ்ணா நகர் மற்றும் தணிகாலம் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அம்பத்துார், மாதவரம் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் 15 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் கீழ் இறங்கியுள்ளது. சூரப்பட்டு பகுதியில், 147 கோடி ரூபாய் செலவில் ஒரு நாளுக்கு, 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க, குடிநீர் வாரியத்திற்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் தண்ணீர் தேவை இதன் வாயிலாகவும் பூர்த்தியாகும். ரெட்டேரி பணிகள் முடிந்தால் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.