உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிது புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால்...பரிதவிப்பு : தாம்பரம் - வேளச்சேரி சாலையில் தினமும் நெரிசல்

புதிது புதிதாக முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால்...பரிதவிப்பு : தாம்பரம் - வேளச்சேரி சாலையில் தினமும் நெரிசல்

தென் சென்னையில் முக்கிய பகுதிகளான தாம்பரம் - வேளச்சேரி இருவழி மார்க்கம், ஆதம்பாக்கம் கருணீகர் சாலை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் தினமும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம் பிரதான சாலையான கருணீகர் சாலை, 30 அடி அகலம் உடையது. இச்சாலையின் இருபுறமும், பல்வேறு வர்த்தக கடைகள், திருமண மண்டபங்கள், நகைக்கடை உள்ளிட்டவை அமைந்துள்ளன.சாலையின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்து, இந்த கடைகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும், பாதாள சாக்கடையின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்படும் போதெல்லாம், சாலையை தோண்டி சீரமைக்கும் பணியை, வாரியம் மேற்கொள்கிறது.பின், சாலையை சீராக அமைக்காததால், போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக சாலை மாறியுள்ளது.இதுபோன்ற பிரச்னைகளால், 'பீக் ஹவர்ஸ்' எனும் காலை, மாலை நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, கருணீகர் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.வாகன ஓட்டிகள் கூறியதாவது:கருணீகர் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.அதாவது, ஆலந்துார் சுரங்கப்பாதையில் இருந்து, கருணீகர் சாலை செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். ஏரிக்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது.மாறாக, ஏரிக்கரை சாலையில் இருந்து மேடவாக்கம் பிரதான சாலை, கிழக்கு கரிகாலன் முதல் குறுக்கு தெரு வழியாக, ஆலந்துார் சுரங்கப்பாதையை வாகனங்கள் அடைய வேண்டும்.அதேபோல, கடைகளுக்கு சரக்கு இறக்கும் வாகனங்களை, காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையில் அனுமதிக்கக் கூடாது.விதிமுறை மீறி சரக்கு இறக்கும் வாகனங்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இதை செயல்படுத்தினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இப்பகுதி மட்டுமின்றி, இதைச் சுற்றியுள்ள தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை இருவழி மார்க்கம் மற்றும் பள்ளிக்கரணையிலும், போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியவில்லை.தாம்பரம் - வேளச்சேரி சாலை பள்ளிக்கரணையில், ஆதிபுரீஸ்வரர் கோவில் - காமகோட்டி நகர் சிக்னல் வரை, ஆக்கிரமிப்பு காரணமாக சாலை குறுகலாக உள்ளது.ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இருந்து, காமகோட்டி நகர் சிக்னலை கடக்க மூன்று நிமிடங்களே போதுமானது. ஆனால், போக்குவரத்து நெரிசலால் 20 நிமிடங்களுக்கு மேலாகிறது.அதேபோல், வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, விஜயநகர், கைவேலி சிக்னலில் இருந்து பள்ளிக்கரணை ரேடியல் சாலை மேம்பாலம் வரை, ௧ கி.மீ.,க்கு மேல் நுாற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு கடைகள், புற்றீசலாக முளைத்துள்ளன.இதனால், தாம்பரம் - வேளச்சேரி சாலையில், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கைவேலி சிக்னல், கருணீகர் சாலை மற்றும் பள்ளிகரணையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் போலீசாரும், மாநகராட்சியினரும் சேர்ந்து, கடைக்காரர்களிடம், 'கட்டிங்' வாங்கிக் கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்றுவதில்லை. அதனால், தினந்தோறும் புதிது புதிதாக கடைகள் முளைத்து வருகின்றன. அனைத்து பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காண, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட பணி முடிந்தால் பிரச்னை ஏற்படாது தென் சென்னையில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் என, மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. புதிதாக புதிதாக பணிகளும் நடந்து வருகின்றன. சிக்னல்களுக்கு மாற்றாக 'யு - டர்ன்' செய்து, சிக்னல் காத்திருப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இருந்தும், பல பிரதான சாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி முடிய வேண்டும். சர்தார் பட்டேல் சாலை, அடையாறு எல்.பி.சாலை, தரமணி எம்.ஜி.ஆர்., சாலை மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் சாலை விரிவாக்கம் பணி, வேளச்சேரி பேருந்து நிலையம் இடமாற்றம் போன்ற நடவடிக்கை எடுத்தால், நெரிசல் ஓரளவு குறையும். அகலப்படுத்திய சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் புதிது புதிதாக முளைப்பதால், சாலை பழைய நிலைமைக்கு சென்றுவிட்டது. இதனால், சாலை விரிவாக்கம் எந்த பயனும் அளிக்கவில்லை. நெரிசல் தான் அதிகரித்துள்ளது. - போக்குவரத்து போலீசார் கருணீகர் சாலையை ஒருவழியாக மாற்றணும் கருணீகர் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவது கடினம். அதனால், அச்சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். அதாவது, ஆலந்துார் சுரங்கப்பாதையில் இருந்து, கருணீகர் சாலை செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். ஏரிக்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்களை மேடவாக்கம் பிரதான சாலை, கிழக்கு கரிகாலன் முதல் குறுக்கு தெரு வழியாக, ஆலந்துார் சுரங்கப்பாதையை வாகனங்கள் அடைய வேண்டும். அதேபோல், வேளச்சேரி 100 அடி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். - வாகன ஓட்டிகள்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ramesh
ஆக 11, 2025 10:32

தாம்பரம் பள்ளிக்கரணை சாலையில் ஒவொரு ஆக்கிரமிப்பு கடைக்காரர்களும் ரோடு முகப்பில் 40 முதல் 50 அடி நீளம் வரை கூட ஆக்கிரமிப்பு செய்து கடை நடக்கிறது . இது நிச்சயமாக இந்த ஆக்கிரமிப்பு கார்போரேஷன் மற்றும் போலீஸ் அனுமதி இல்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை


Rameshmoorthy
ஆக 11, 2025 09:44

Corruption from councillors are making it worse, transport cops and corporation are not doing anything to control encroachments